கிழக்கு மாகாணத்தில் வாழ்வாதார அபிவிருத்தி மற்றும் கல்வி முன்னேற்றத்திற்கான செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் சுவிஸ் உதயம் அமைப்பின் ஊடாக பல்கலைகழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான உதவிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.வறிய நிலையிலுள்ள குடும்பங்களிலிருந்து பல்கலைகழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களின் தடையின்றிய கல்வி நடவடிக்கையினை நோக்காக கொண்டு இந்த உதவிகள் வழங்கப்படவுள்ளன.இது தொடர்பான நிகழ்வு மட்டு.ஊடக அமையத்தில் சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண கிளை தலைவரும் முன்னாள் பிரதி கல்வி பணிப்பாளருமான மு.விமலநாதன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் பொருளாளரும் சமூக சேவையாளருமான க.துரைநாயகம், சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண கிளை செயலாளர் திருமதி ரொமிலா செங்கமலன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அமெரிக்காவில் உள்ள மண்டூரை சேர்ந்த பொறியியலாளர் க.சிவகுமாரனின் உதவியுடன் மட்டக்களப்பிலிருந்து இலங்கையின் பல பாகங்களிலும் உள்ள பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான உதவிகள் வருடாந்தம் வழங்கப்பட்டுவருகின்றது.
இதன்கீழ் முதல்கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து தெரிவுசெய்யப்பட்ட பத்து மாணவர்களுக்கான உதவிகள் வழங்கப்படவுள்ளது.
மாதாந்தம் அவர்களின் தேவையினை பூர்த்திசெய்யக்கூடிய வகையில் ஒவ்வொருவருக்கும் பத்தாயிரம் ரூபா வழங்கப்படவுள்ளதாக சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் பொருளாளரும் சமூக சேவையாளருமான க.துரைநாயகம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மாணவர்களின் கல்வி வளர்ச்சியை நோக்காக கொண்டு இந்த உதவிகள் தொடர்ந்து வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.