அரச வலைத்தளத்தில் இருந்து எமது பாரம்பரிய கல்முனை வடக்கு பிரதேச செயலகம் நீக்கப்பட்டு இருப்பது தொடர்பாக எமது தமிழ் மக்கள் கொதிப்படைந்துள்ளனர் .இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் காட்டமாக தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் அரசவலைத்தளத்தில் இருந்து கல்முனை வடக்கு செயலகமும், 29 கிராம சேவையாளர் பிரிவுகளும் நீக்கப்பட்டு இருப்பது தொடர்பாக அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ..
இந்த விடயம், மேலும் மேலும் கல்முனை தமிழ் மக்களுக்கு மாத்திரம் அல்ல ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனங்களையும் புண்பட செய்திருக்கின்றது. மாறாக கொதிப்படையை செய்திருக்கின்றது. ஒற்றுமை பற்றி பேசிக்கொண்டு இன்னும் இன்னும் இந்த வேற்றுமை நடவடிக்கைகளை தொடர்ச்சியாக இனரீதியாக செய்து வருகின்ற அந்த இனவெறியர்களின் செயல்பாடு நிறுத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் நாங்களும் அதே பாணியிலேயே செயல்பட நிர்பந்திக்கப்படுவோம்.
நாங்கள் எவ்வளவுதான் ஒற்றுமையாக வாழ வேண்டும், ஐக்கியமாக ,சமாதானமாக வாழ வேண்டும் என்று பல முயற்சிகள் எடுத்த போதிலும், தொடர்ச்சியாக சில இனவாதிகள் அதனை அலட்சியம் செய்து வருவது ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு வழி வகுக்காது என நினைக்கின்றேன்.
எனவே இந்த விடயத்தில் உரிய சம்பந்தப்பட்டவர்களோடு பேசி கடுமையான நடவடிக்கை எடுக்க இருக்கின்றேன்.
என்னிடம் கல்முனையை சேர்ந்த முக்கிய பிரதிநிதிகள் இது தொடர்பாக தொடர்ச்சியாக ஆத்திரத்தோடு முறையிட்டு வருகின்றார்கள் . பலர் நேரடியாக வந்து தமது கண்டனங்களை உணர்ச்சி வசப்பட்டு தெரிவிக்கின்றார்கள்.
இதனை ,இன்னும் இன்னும் நீங்களும் உங்கள் கட்சியும் வெறுமனே பார்த்துக் கொண்டு இருப்பது ஏன்? என ஆக்ரோஷமாக கேட்கிறார்கள்..
எனவே இதனை சாதாரணமாக நான் எடுத்துக் கொள்ள முடியாது .எனது கட்சியின் தலைவர் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் இது தொடர்பாக தெரிவித்து இருக்கின்றேன்.
விரைவில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.