ஜனநாயகப் போராளிகள் கட்சி பிரதிநிதிகள் இந்திய அரச பிரதிநிதிகளுக்கும் இடையில் இந்தியாவில் சந்திப்பு… (பூரண அதிகாரங்களுடன் கூடிய மாகாணசபை, 13ஐத் தாண்டி தமிழ் மக்களின் அபிலாசைக்கான அரசியற்தீர்வு குறித்து வலியுறுத்து)

பூரண அதிகாரங்களுடன் கூடிய மாகாணசபை, 13வது திருத்தச்சட்டத்தைத் தாண்டி தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றக் கூடிய வகையிலான அரசியற் தீர்விற்கு இந்தியா பக்க பலமாக இருக்க வேண்டும் என இந்தியப் பிரதிநிதிகளிடம் வலியுறுத்தியுள்ளதாக ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனநாயகப் போராளிகள் கட்சியினராகிய நாங்கள் இந்தியாவில் பல முக்கிய சந்திப்புகளை மேற்கொண்டோம்.

இந்திய அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினர்கள், ஆளுங்கட்சியின் பிரதிநிதி விவேக் ஜீ போன்றவர்களுடன் சந்திப்பினை மேற்கொண்டிருந்தோம்.

இதன் போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், தற்போதைய இலங்கையின் நிலைமை, தமிழ் மக்களின் அரசியற் தீர்வு குறித்தான விடயங்கள், எமது மக்களின் நிலைப்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடினோம்.

விசேடமாக இந்திய இலங்கை ஒப்பந்தத்தினூடாக கொண்டுவரப்பட்ட மாகாணசபைகள் முறைமை பூரண அதிகாரங்களுடன் கூடியதாக அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டதாக அமைய வேண்டும். நடாத்தப்படாமல் இருக்கும் மாகாணசபைத் தேர்தல் விரைவில் நடாத்துவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும். 13வது திருத்தச்சட்டத்தைத் தாண்டி தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றக் கூடிய வகையிலான அரசியற் தீர்விற்கு இந்தியா பக்க பலமாக இருக்க வேண்டும்.

பயங்கரவாதத் தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட்டு போராளிகளும், தமிழ் மக்களும் சுதந்திரமாகச் செயற்படக்கூடிய நிலைமை உருவாவதற்கு இந்தியா உதவ வேண்டும். இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஏனைய வல்லரசுகளின் ஆதிக்கத்தினை போராளிகள் என்ற ரீதியில்  நாங்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. அந்த வகையில் இந்தியா அதற்குரிய ஏதுவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அத்தோடு போராட்ட ரீதியில் தமிழ் மக்களுக்குத் தலைமை வகித்த போராளிகள் ஜனநாய நீரோட்டதிலும் மக்களுக்கான தலைமைத்துவத்தை வழங்குவதற்கு இந்தியா பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என்ற விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர், ஊடகப் பேச்சாளர் க.துளசி, உபதலைவர் என்.நகுலேஸ், மட்டு அம்பாறை இணைப்பாளர் தீபன், இளைஞர் அணி பொறுப்பாளர் நெல்சன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts