நூருல் ஹுதா உமர்
அம்பாறை மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு அண்மையில் வெளியான ஆசிரிய இடமாற்ற பட்டியலில் உள்ள அதிருப்தி நிலை தொடர்பில் கலந்துரையாட திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் ஜனாதிபதி செயலாளர் சமன் எக்கநாயக்கவை ஜனாதிபதி செயலகத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது அம்பாறை மாவட்ட கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, திருக்கோவில் போன்ற கல்வி வலயங்களிலிருந்து வினைத்திறன் மிக்க 400 க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் முறையான பதிலீடுகளின்றி ஏனைய மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்படுவதனால் அம்பாறை மாவட்ட கல்வி பின்னோக்கி செல்லும் அபாயம் உள்ளத்துடன் மாணவர்களின் கல்விநிலை சீரழியும் ஆபத்தும் உள்ளதை ஜனாதிபதி செயலாளருக்கு விளக்கிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் இந்த இடமாற்றத்தை ரத்துசெய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க இது விடயமாக கிழக்கு மாகாண பிரதம செயலாளரை தொடர்பு கொண்டு இந்த இடமாற்றத்தை ரத்து செய்ய தேவையான மேலதிக நடவடிக்கையை எடுக்குமாறு பணிப்புரை விடுத்ததுடன் இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பில் நாளை (06) தனக்கு தெரியப்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை தொடர்புகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் இந்த இடமாற்ற விடயம் தொடர்பில் முழுமையாக விளக்கியத்துடன் மாணவர்களின் கல்வி அடைவுகளை கவனத்தில் கொண்டு இடமாற்றத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டார். மேலும் ஜனாதிபதி செயலாளரும் ஆளுநருக்கு இந்த இடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டிய அவசியம் தொடர்பில் விளக்கியுள்ளார்.