வரலாற்றுப்பிரசித்திபெற்ற கதிர்காம கந்தன் ஆலயம் மற்றும் உகந்தமலை முருகனாலயத்தின் வருடாந்த ஆடிவேல்விழா உற்சவம் இன்று 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
தொடர்ந்து 15நாட்கள் திருவிழாக்கள் நடைபெறும்.15நாள் திருவிழாவின்பின்னர் ஜூலை 28ஆம் திகதி சனிக்கிழமை தீர்த்தோற்சவம் இடம்பெறும்.
இன்று கொடியேற்றதினம் தொடக்கம் கதிர்காம இந்துயாத்திரிகர் விடுதி மற்றும் தெய்வயானைஅம்மனாலய விடுதியிலும் மற்றும் காரைதீவு உகந்தை யாத்திரீகர் விடுதியில் அன்னதானநிகழ்வு தொடர்ந்து இடம்பெறும். இன்னும் சில மடங்களிலும் அன்னதானம் இடம்பெறும்.
விழாக்காலங்களில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதென்றும் அடியார்களுக்கான சகல வசதிகளும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதென்றும் ஆலயநிருவாகங்கள் தெரிவித்தனர்.
கல்முனையிலிருந்து கதிர்காமத்திற்கும் உகந்தைக்கும் பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என கல்முனைச்சாலை அத்தியட்சகர் வெள்ளத்தம்பி ஜௌபர் தெரிவித்தார்.
இதேவேளை கதிர்காம ஆடிவேல் உற்சவத்திற்கென யாழ்ப்பாணத்திலிருந்து 56நாட்கள் பாதயாத்திரையிலீடுபட்டு தற்சமயம் வீரையடியில் தங்கியிருக்கின்ற வேல்சாமி தலைமையிலான குழுவினரும் மற்றும் 3000பேரும் நேற்று (12) கதிர்காமத்தை சென்றடைந்துள்ளனர்.
அது அவ்வாறிருக்க இன்று (13) உகந்தைமலை முருகனாலய கொடியேற்றத்தின் பின்னர் காட்டுப்பாதையினூடாக கதிர்காமம் நோக்கிபாதயாத்திரையில் பயணிக்க அங்கு சுமார் 4000பேரளவில் தங்கியிருப்பதாக ஆலயத்தலைவர் சுதுநிலமே திசாநாயக்க தெரிவிக்கிறார்.
காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் ஆடிவேல்விழா உற்சவமும் இதே திகதியில் அதாவது இன்று யூலை 13இல் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 28இல் தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது