தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 17 மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் நால்வரின் பெயர்களை மாணவர் பதிவேட்டிலிருந்து நீக்கியமை தொடர்பில் அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
நிர்வாகத்தில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு கூடியிருந்த சந்தர்ப்பத்தில், பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தினரால் தொழில்நுட்பப் பீட மாணவர்கள் மீது பகிடிவதை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக மாணவ செயற்பாட்டுக்குழுவின் தலைவர் கிஹான் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ள மற்றும் மாணவர் பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்ட மாணவர்கள் தற்போது பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றுகூடியுள்ளதாக மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த மாணவர்கள் தொடர்பில், பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் வினவியபோது, பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் 3 முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
முறைப்பாடு தொடர்பில், மாணவர்களிடம் வாக்குமூலத்தைப் பெற்றதன் பின்னர் உரிய நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.