மட்டக்களப்பு, பெரியபோரதீவு – பழுகாமம் ஆற்றுப்பகுதியில் உள்ள காட்டு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆற்றங்கரையினை சூழவுள்ள நாணற்புற்கள் மற்றும் காடுகளில், நேற்று முன்தினம் இரவு இந்த தீவைப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது சுமார் 10 ஏக்கர் காடுகள் தீயினால் எரிந்து நாசமாகியுள்ளதாகவும் அதில் குடிகொண்டிருந்த பெருமளவான பறவைகள், விலங்கினங்கள், மீன்கள் என பெருமளவான உயிரினங்கள் அழிந்துள்ளதாகவும் பிரதேசசபை தவிசாளர் தெரிவித்தார்.
குறித்த தீயானது போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் உதவியுடனும் பிரதேசசபையின் உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள்,பிரதேசசபையின் உறுப்பினர்களின் உதவியுடனும் நேற்று மாலை கட்டுக்காட்டின் கீழ் கொண்டுவரப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
குறித்த பகுதியில் வெளிநாட்டு பறவைகள் உட்பட பல்வேறு பறவையினங்களும் உயிரினங்களும் வாழ்ந்துவரும் நிலையில் இவ்வாறான மிலேச்சத்தனமான செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்காரணமாக ஆயிரக்கணக்கான பறவைகள் இறந்திருக்கலாம் எனவும் பல பறவைகள் இடங்களை பறிகொடுத்த நிலையில் அல்லாடிவருதையும் காணமுடிகின்றது.
வயல்வெளிகள் மத்தியில் குறித்த ஆறும் அதனை சூழவுள்ள பகுதிகளிலும் இயற்கை எழில்கொஞ்சம் பகுதியாகவும் இயற்கையின் உறைவிடமாகவும் உள்ள நிலையில் அவற்றினை சீர்குலைக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
சுற்றாடலையும் காடுகளையும் பாதுகாக்கப்போவதாக அரசாங்கம் தெரிவிக்கின்றபோதிலும் இவ்வாறான இடங்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.