அனுமதிக்கப்பட்ட அளவை மீறி அரச நிறுவனங்களுக்கு ஊழியர்களை இணைக்கத் தடை

அரச நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள ஆளணிக்கு மேலதிகமாக உத்தியோகத்தர்களை சேவையில் இணைத்துக்கொண்டு சம்பளம் வழங்கத் தடை விதித்து சுற்றுநிருபம் வௌியிடப்பட்டுள்ளது.

திறைசேரியின் முகாமைத்துவ சேவை திணைக்களத்தின் முழுமையான அனுமதியின்றி அரச நிறுவனங்களுக்கான உத்தியோகத்தர்களை இணைத்துக்கொண்டு, அவர்களுக்கான மாதாந்த சம்பளம் வழங்குவ​தைத் தடுக்கும் வகையில் இந்த சுற்றுநிருபம் வௌியிடப்பட்டுள்ளதாக நிதியமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனைகளை மீறும் வகையில் மேற்கொள்ளப்படும் ஆட்சேர்ப்புகள் தொடர்பில் குறித்த நிறுவனம், நிறுவனம் சார் அமைச்சின் செயலாளர், நிறுவன தலைமை அதிகாரி, மாகாண பிரதம செயலாளர் மற்றும் நிதிப்பிரிவின் தலைமை அதிகாரி ஆகியோர் பொறுப்பேற்க வேண்டுமெனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, மேலதிக சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் குறித்த அரச நிறுவனங்களின் தலைவர்கள், நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் கணக்காளர் ஆகியோர் பொறுப்பேற்க வேண்டுமெனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

மாகாண சபைகள் உள்ளிட்ட அனைத்து அரச நிறுவனங்களிலும் மேலதிக சேவையாளர்கள் இருப்பின் அவர்கள் தொடர்பில் ஆராய்ந்து, சேவையாளர்களின் எண்ணிக்கை மற்றும் சம்பள விபரம் ஆகியவற்றை முகாமைத்துவ சேவைத்திணைக்களத்திற்கு அனுப்பி வைக்குமாறும் நிதியமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts