விஜயகலா விவகாரம்: சட்ட நடவடிக்கை குறித்து ஆராயுமாறு அறிவுறுத்தல்!

முன்னாள் இராங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த சர்சைக்குரிய கருத்து தொடர்பிலான விசாரணை அறிக்கைக்கு அமைய மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயுமாறு சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், நாடாளுமன்றம் விஜயகலா மகேஸ்வரன் விடயத்தில் ஏதேனும் நடவடிக்கையினை மேற்கொள்ள தீர்மானித்திருப்பின், அதனை நாடாளுமன்ற நிலையியல் கட்டளை சட்டத்தின் கீழ் மேற்கொள்ளுமாறும் சபாநாயகருக்கு சட்ட மா அதிபர் திணைக்களம் ஆலோசனை வழங்கியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் உருவாக்கப்பட வேண்டும் என விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பில் பெற்றுக்கொள்ளப்பட்ட வாக்குமூலம் உள்ளிட்ட அறிக்கைகள் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அண்மையில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திடம் அறிவித்திருந்தனர்.

இது தொடர்பில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆறு பேரிடமும், 14 அரச அதிகாரிகளிடமும், 30 ஊடகவியலாளர்கள் என மொத்தமாக 59 பேரிடம் வாக்கு மூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும் பொலிஸார் கூறியிருந்தனர்.

இதேவேளை, விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த சர்சைக்குரிய கருத்து தொடர்பில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், அவர் தனது இராஜாங்க அமைச்சர் பதவியினை இராஜினாமா செய்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

Related posts