முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தென்னியன்குளத்தினை அடுத்துள்ள காட்டுப் பகுதயில் புதையல் தோண்டும் நடவடிக்கைக்காக சிறுவன் ஒருவன் நர பலி கொடுக்கப்பட்டுள்ளான? என்ற சந்தேகம் அப் பகுதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்னியன்குளத்தினை அடுத்துள்ள காட்டுப்பகுதியில் தொல்லியல் முக்கியத்துவம் மிக்கதென தொல்லியல் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட பகுதியில் புதையல் தோண்டியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அப் பகுதியில் சிறுவன் ஒருவனின் பாதணியும் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் 8 அடி ஆழமான குழியொன்றும் வெட்டப்பட்டு, சேவல் ஒன்று பலி கொடுக்கப்பட்டுள்ளமைக்கான அடையாளங்களும் பூஜைகள் இடம்பெற்றமைக்கான தடயங்களையும் மல்லாவி பொலிசார் நேற்றைய தினம் கண்டெடுத்துள்ளனர்.
இந் நிலையிலேயே சிறுவனின் பாதணி கண்டெடுக்கப்பட்டுள்ளமையினால் அந்த புதையல் தோண்டும் நடவடிக்கைக்காக சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று கிராம மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.
எனினும் இது தொடர்பாக மல்லாவி பொலிஸார் தெரிவிக்கையில், கிராம மக்களின் முறைப்பாட்டின் அடிப்படையில் தாம் அங்கு சென்று சோதனைகளை மேற்கொண்டோம் அப் பகுதியிலிருந்து ஒருசோடி பாதணியொன்றை மீட்டோம். எனினும் அப் பகுதியில் சிறுவன் எவரும் காணாமல் போனதாக எமக்கு எவ்வித முறைப்பாடும் இதுவரையில் கிடைக்கவில்லை.
அத்துடன் அப் பகுதியில் சட்டவிரோத மரக் கடத்திலில் ஈடுபடும் நபர்கள் இந்த பாதணிகளை விட்டு சென்றிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.