உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நடத்தப்பட்டதைப் போன்று, கலப்பு முறையிலோ அல்லது பழைய முறையில் சரி இந்த வருடம் டிசம்பர் மாதம் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டுமென, பெருநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, 9 மாகாணங்களுக்குமான தேர்தலையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஒரே நேரத்தில் நடத்துவது சிறந்தததென்றும் குறிப்பிட்டார்.
பத்தரமுல்லையில் உள்ள ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டப் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் சம்பிக்க,
எதிர்வரும் 24ஆம் திகதி மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கையானது நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், 3 மாகாண சபைகள் கலைக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியாவதுடன், மேலும் 3 மாகாண சபைகள் செப்டம்பர், ஒக்டோபர் மாதங்களில் கலைக்கப்படவுள்ளதுடன், ஏனைய 3 மாகாண சபைகள் அடுத்த வருடம் கலைக்கப்படவுள்ள நிலையில், குறைந்தது கலைக்கப்பட்டுள்ள மாகாண சபைகளுக்கான தேர்தலையாவது டிசம்பர் மாதம் நடத்துவது தொடர்பில் பல சிக்கல்கள் தோன்றியுள்ளதாகத் தெரிவித்தார்.
இவ்வாறு மாகாண சபைத் தேர்தலை பகுதிப் பகுதியாக நடத்துவதற்குக் காரணம் ஆரம்ப காலத்தில் இடம்பெற்ற யுத்தமும், இதனால் ஏற்பட்ட பாதுகாப்பு பிரச்சினைகளுமே காரணமாகிவிருந்தது. ஆனால் பிறகு இது அரசியல் தந்திரமாக மாறியது.
எனவே, பிரதமரும் ஜனாதிபதியும் எதிர்கட்சிகள் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனான சந்திப்பை ஏற்படுத்தி, கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து அனைத்து மாகாணங்களுக்குமானத் தேர்தலை டிசம்பர் மாதம் நடத்துமாறும், இல்லையென்றால் குறைந்தது 6 மாகாண சபைகளுக்கானத் தேர்தலையாவது டிசம்பர் மாதம் நடத்துமாறும் வேண்டுகோள் விடுப்பதாகத் தெரிவித்தார்.