கிழக்கில் 466பேரை ஆசிரியஆலோசகர்களாக நியமிக்க அனுமதி!

கிழக்கு மாகாணத்தில் 466பேரை ஆசிரிய ஆலோசகர்களாக நியமிக்க அரசசேவை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாக கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரி.எ.நிஸாம் தெரிவித்தார்.
 
கல்விப்புலத்தில் புதிதாக இலங்கை  ஆசிரியஆலோசகர்சேவை ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. கிழக்கில் அதன் நடவடிக்கைகள் குறித்து கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
 
அவர் மேலும் கூறுகையில்:
கல்வியமைச்சினால் உருவாக்கப்பட்டுள்ள புதிய ஆசிரிய ஆலோசகர் சேவைப் பிரமாணக்குறிப்பிற்கமைவாக கிழக்குமாகாணத்தில் கடமையாற்றும் ஆசிரியஆலோசகர்களை புதியசேவையின் கீழ் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
 
அனுமதிவழங்கப்பட்ட 466பேரில் 370பேர் தமிழ்மொழிமூலமும் 96பேர் சிங்களமொழிமூலமும் தெரிவாகவுள்ளனர். அதற்காக கிழக்கிலுள்ள 15தமிழ் 5சிங்கள மொழிமூல மொத்தமாக 17கல்வி வலயங்களிலும் தற்போதுள்ள ஆசிரியஆலோசகர்களது தகவல்கள் கோரப்பட்டுள்ளன. 
 
இவர்களில் சிலர் போட்டிப்பரீட்சைமூலமாகவும் சிலர் தற்காலிக அடிப்படையிலும் நியமனம்செய்யப்பட்டவர்களாவர்.
 
இவர்களுள் தகுதியானவர்களை ஆசிரியஆலோசகர் சேவைப்பிரமாணக்குறிப்பிற்கமைவாக உள்ளீர்க்க தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்களை 17கல்விவலயங்களுக்கும் நியமிக்க நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.
 
ஏலவே வலயத்துள் மாத்திரம் வரையறுக்கப்பட்டிருந்த இந்நியமனம் புதிய சேவைப்பிரமாணத்தின்படி எந்தவொருவலயத்திற்கும் நியமிக்கப்படுவதற்கு வகைசெய்துள்ளது.என்றார்.

Related posts