குற்றங்களை மறைப்பதற்கு அதிகாரத்தை பெற கனவுகாணும் ஒன்றிணைந்த எதிர் கட்சியினர்

சட்டத்தில் காணப்படுகின்ற ஓட்டைகளுக்கூடாக நுளைந்து மூன்றாவது தடவையும் அரசியல் யாப்புக்கு அப்பால் தாங்கள் ஜனாதிபதியாக வரமுடியும் என ஒன்றிணைந்த எதிர் கட்சியினர் நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள். என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில்  செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கையில் 19 வது திருத்தத்தில் இரண்டு தடவைகளுக்கு மேல் ஒருவர் ஜனாதிபதி பதவியை வகிக்க முடியாது என மிகவும் வெளிப்படையாக சொல்லப்பட்டிருக்கின்றது . எனவே இதையும் கடந்து சில சட்டத்தில் காணப்படுகின்ற ஓட்டைகளுக்கூடாக நுளைந்து மூன்றாவது தடவையும் அரசியல் யாப்புக்கு அப்பால் தாங்கள் ஜனாதிபதியாக வரமுடியும் என ஒன்றிணைந்த எதிர் கட்சியினர் நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள்.

இதற்கு முக்கியமான சில காரணங்கள் உள்ளன அவர்கள் பதவியில் இருந்தால்தான் பல விடயங்களை தாங்கள் சாதிக்கலாம் அதேபோல் பல குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம். எனவே முன்னாள் ஜாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதியாக வருவதென்பது சட்டத்திற்கு அப்பால்பட்ட விடயமாகத்தான் இருக்கமுடியும்.

கடந்தகால யுத்தத்தின்போது மனித உரிமை மீறல்கள் மிகவும் அப்பட்டமாக நடைபெற்றிருக்கின்றது, ஊழல் மோசடி லஞ்சம் என மிகவும் அப்பட்டமாக நடைபெற்றிருக்கின்றது, அரச நிதி வகை தொகை இல்லாமல் இறைக்கப்பட்டிருக்கின்றது.

எனவே இப்படியான குற்றச்சாட்டுகளுக்கு விசேடமான நீதிமன்றங்களை அமைத்து விசாரிப்பதற்குரிய செயற்பாடுகள் நடைபெற்றுககொண்டிருக்கும்போது இவர்கள் எப்படியாவது அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொள்ளவேண்டும், தங்களை பாதுகாத்துக் கொள்ளவேண்டும் தங்கள் குற்றச்சாட்டுக்களை மறைப்பதற்கும் அதோபோல் அரசியல் பழிவாங்கல்களை செய்வதற்கும் இவர்கள் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு முனைகின்றார்கள்.

அதில் ஒன்றுதான் எதிர் கட்சி பதவியை கைப்பற்றிக்கொள்வது. இவர்கள் எதிர் கட்சி பதவியை பெறுவதானால் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருக்கின்ற ஆளும் கட்சியில் இருக்கின்ற சகல அமைச்சர்களும் உறுப்பினர்களும் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்திருக்கும்போது அவர்களைச் சார்ந்தவர்கள் எதிர்கட்சியாக வருவதில் ஆட்சேபனை இருக்க முடியாது. ஆனால் ஆளும் கட்சியிலும் இருந்துகொண்டு எதிர் கட்சியாகவும் இருப்பதென்பது நாகரிகமான செயலாக இருக்கமுடியாது. என தெரிவித்தார்.

Related posts