மட்டக்களப்பு மாவட்டத்திற்கு புகழ்சேர்க்கும் திறமையான விளையாட்டு வீரர்களுக்கு உள்ளுராட்சி சபைகள் உள்ளிட்ட துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளருமான பூ.பிரசாந்தன் தெருவித்தார்.
மட்டக்களப்பு மட்டிக்கழி கதிரொளி விளையாட்டுக் கழகத்தின் 46வது ஆண்டு நிறைவு உதைப்பந்தாட்டப் போட்டி நிகழ்வு வெள்ளிக்கிழமை(31.8.2018) மாலை4.00 மணியளவில் கழகத்தலைவர் ரஞ்சன் தலைமையில் மட்டிக்கழி விளையாட்டு மைதானத்ததில் நடைபெற்றது.இங்கு அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
முன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தனின் காலகட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் திறமைகளை வெளிப்படுத்தும் வீரர்களுக்கு அவர்களின் கல்வித் தகைமைக்கு ஏற்ப வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்குவதற்கான பிரேரனை மாகான சபையில் கொண்டுசெல்லப்பட்டு நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. ஆனால் ஆட்சி மாற்றத்தினால் இது கைகூடவில்லை. அதேபோன்று மட்டக்களப்பு மாநகரசபையினாலும் கடந்த காலங்களில் பல உதைப்பந்தாட்ட வீரர்களுக்கு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்பட்டிருந்தது.
விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டி தேசிய ரீதியில் தமது திறமைகளை வெளிக்காட்டும் வீரர்களில் பெரும்பாலானவர்கள் கல்வித் துறையில் ஆர்வம் காட்டுவதில் குறைவடையும் போது அரச வேலைவாய்ப்புகளில் உள்ளீர்க்கப்படுவதற்கான மேலதிக கல்வித் தகைமைகளை பெறமுடியாத நிலை ஏற்பட்டு விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டி சாதித்தவர்கள் அரச உத்தியோகம் பெறமுடியாது.
ஓடாவி,கடற்றொழில்,கூலித்தொழில், ஓட்டோ சாரதிகள் மற்றும் வேலையற்றவர்கள் என தமது வாழ்வாதாரத்திற்கு பெரிதும் சிரமப்பட்டுக்கொண்டிருக்கும் நிலை தோன்றியுள்ளது. இங்கு உதைப்பந்தாட்ட நடுவகம் புரியும் சத்தியசீலன்,அன்ரா,ஜங்ஸ்டார் தொடர்பான கோல் போட்ட சுபராஜ் உள்ளிட்ட பல திறமையான உதைபந்தாட்ட வீரர்கள் வேலைவாய்ப்புக்களில்லாமல் வாழ்க்கையைத்தொலைத்து நிற்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.இதனால் விளையாட்டில் ஆர்வம் குறைவடைகின்றது. பெற்றோரும் தமது பிள்ளைகளை விளையாட்டுத்துறைக்கு அனுமதிப்பதுவும் இதனால் கடினமாகவுள்ளது.
இன் நிலையினை மாற்ற வேண்டுமானால் மாவட்டத்திற்கு புகழ்சேர்க்கும் விளையாட்டு வீரர்களுக்கு உள்ளுராட்சி சபைகள் உள்ளிட்ட துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
எமது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் மட்டக்களப்பு மாநகர சபை உள்ளிட்ட அனைத்து உள்ளுராட்சி சபைகளிலும் குறித்த கோரிக்கையினை பிரேரணையாக முன்வைக்கவுள்ளனர். இதனைகட்சி அரசியல் பேதமின்றி அனைவரும் மாவட்டத்தின் விளையாட்டுத்துறை அபிவிருத்தி கருதி ஏற்றுக்கொள்வார்கள் என நினைக்கின்றேன்.அவ்வாறு ஏற்றுக்கொள்ளும் இடத்து மட்டக்களப்பு மாவட்டம் விளையாட்டுத்துறையில் தனியிடம் பிடிக்கும் எனவும் தாம் நம்புவதாகவும் குறிப்பிட்டார்.