சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக கொண்டுவரப்பட்ட சுமார் 60 இலட்சம் ரூபாய் பெறுமதியான உலர்ந்த கடலட்டைகளுடன் ஆறு பேர் சந்தேகத்தின் பேரில் (14) இரவு கற்பிட்டி விஜய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக, புத்தளம் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் சரத் சந்திரநாயக்க தெரிவித்தார்.
கற்பிட்டி விஜய கடற்படையினரால் (14) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் கற்பிட்டி நகரைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் கூறினார்.
குறித்த நபர்கள், உலர்ந்த கடலட்டைகளை சந்தேக நபர்கள், 20க்கும் மேற்பட்ட உரைப் பைகளில் பொதி செய்து அதனை மூன்று இயந்திர படகுகளில் கொண்டு வந்துள்ளனர்.
இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அறுவரும், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஒரு தொகை உலர்ந்த கடலட்டைகளும், அவர்கள் பயணித்ததாக ௯றப்படும் மூன்று மீன்பிடி இயந்திர படகுகளும் புத்தளம் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நோக்கத்துடன் குறித்த உலர்ந்த கடல் அட்டைகள் இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக கொண்டு வந்திருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாகவும், அவ்வாறு கொண்டுவரப்பட்ட கடலட்டைகள் சுமார் 60 இலட்சம் ரூபாய்க்கும் ௯டுதலான பெறுமதி கொண்டவை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஆறு பேரும் கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர்,சனிக்கிழமை (15) பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், அந்த ஆறு பேரையும் திங்கட்கிழமை (17) கற்பிட்டி சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.