மண்டூர் குருமண்வெளிப் படகுச்சேவை உரிய நேரத்திற்குச் செல்லாமையால் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவதாக விசனம்

மட்டக்களப்பு மண்டூர் குருமண்வெளிப் படகுச் சேவை உரிய நேரத்திற்கு இயங்காமல் அதனை நடாத்துகின்றவர்கள் நேரத்தினை வீணடிப்பதனால் உரிய நேரத்திற்குக் கடமைக்குச் செல்லமுடியாத  நிலை ஏற்பட்டுள்ளதாக  ஆசிரியர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில் மண்டூர் குருமண்வெளி கிராமத்தினை ஊடறுத்துச் செல்லும் மட்டக்களப்பு வாவியினைக் கடப்பதற்கு இப்படகுச்சேவை பயன்படுத்தப்படுகின்றது.
 இதனை நம்பியே பட்டிருப்பு மற்றும் சம்மாந்துறைக் கல்விவலயத்தில் இருக்கின்றஅதிகஸ்டப்பிரதேச ஆசிரியர்கள் பயணம் செய்கின்றனர் இவ்வாறான நிலையில் படகுச்சேவையினை நடாத்துகின்றவர்கள் உரிய நேரத்திற்கு இயந்திரப்படகினைச் செலுத்தாது அவர்கள் நினைத்தபடி கால அட்டவணைக்கு மாறாக செலுத்துவதனால் 7.30 மணிக்கு பாடசாலைக்குச் செல்லமுடியாத நிலைக்கு உள்ளாகுவதாக ஆசிரியர்கள்  விசனம் தெரிவிக்கின்றனர்.
 தினமும் 7.10 இற்கு குருமண்வெளிக் கரையில் இருந்து புறப்பட்டு 10 நிமிடத்திற்குள் மண்டூர் கரையை வந்தடைய வேண்டிய படகு அதனைச்செலுத்துகின்றவர்களின் அசமந்தப் போக்கினால் தாமதமாகி வருகைதரும் நிலை உருவாகியுள்ளது.
 இன்று பாடசாலைகளில்  ஆசிரியர்களின் வரவைப் பதிவு செய்வதற்கு கைவிரல் இயந்திர அடையாளப் பதிவு பொருத்தப்பட்டுள்ளது இதில் 7.30 மணிக்குள் தங்களது கைவிரல் அடையாளங்களை இடவேண்டும் அதைவிடத் தாமதமாகி 7.31 தொடக்கம் 7.59 இற்குள்  மூன்றுநாட்கள் கையொப்பத்தினைப் பதிவுசெய்தால்  அரைநாள் விடுமுறையாகவே கணிக்கப்படுகின்றது.
 இதனால் ஆசிரியர்கள் தங்களது உயிரைப் பணையம் வைத்து பாடசாலைக்குச் செல்லும் நிலையில் இயந்திரப்படகுச் சேவையினை நடாத்துகின்றவர்களின் சரியான திட்டமிடல் மற்றும் அசமந்தப்போக்கினால் தங்களால் உரியவேளைக்குப் பாடசாலைக்குச் செல்லமுடியாத நிலை அண்மைக்காலமாக ஏற்பட்டுவருவதாக ஆசிரியர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
 எனவே உரிய அதிகாரிகள் இந்த விடயத்தில் தலையிட்டு உரிய வேளைக்கு படகுச்சேவை இடம்பெற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts