திருகோணமலையில் உயிரிழந்த பெண் விரிவுரையாளரின் இறுதிச்சடங்குகள் (திங்கட்கிழமை) வவுனியாவில் இடம்பெற்றதுடன், இதன்போது குறித்த பிரதேசவாசிகளால் ஆர்ப்பாட்டமொன்றும் மேற்கொள்ளப்பட்டது.
வவுனியா, ஆசிகுளம் பகுதியில் வசிக்கும் 29 வயதான நடராசா போதநாயகி கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் விரிவுரையாளராக பணியாற்றி வந்தார்.
இவர் பல்கலைக்கழகத்தில் இருந்து வீடு சென்ற நிலையில் காணாமல் போயிருந்ததுடன் கடந்த வெள்ளிக்கிழமை மாலை திருகோணமலை சங்கமித்த கடற்கரையில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் சடலத்தை மீட்ட பொலிஸார் திருகோணமலை நீதவானின் உத்தரவிற்கமைய யாழ்போதனா வைத்தியசாலையில் கடந்த சனிக்கிழமை சட்டவைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தியிருந்தனர்.
இதன்போது குறித்த பெண் 3 மாத கர்ப்பிணியாக உள்ளதாகவும் நீரில் மூழ்கியமையால் மூச்சுதிணறி மரணம் சம்பவித்துள்ளதாகவும் சட்டவைத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கபட்ட நிலையில் 24 மதியம் 3 மணியளவில் வவுனியா கற்குளத்தில் உள்ள அவரது வீட்டில் இறுதிக்கிரியைகள் நடைபெற்றன.
இதன்போது அங்கு ஒன்று கூடிய பெண்கள் குறித்த பெண்ணின் மரணத்திற்கு நீதி வேண்டும் எனத் தெரிவித்து பதாதைகளை ஏந்தியவண்ணம் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது ‘கொலையா தற்கொலையா?’ ‘போய்வா மகளே உன் உயிர் விலைமதிப்பில்லாதது என உணரும் வரை துரோகிகளின் வாழ்விடங்களில் நாமும் பயணம் செய்வோம் முடிவுகாணும் வரை’ , ‘இந்நிலைக்கு உன்னைத் தூண்டியது யார்’, ‘துரோகத்தனங்களால் தோற்கடிக்கப்பட்டது விடுதலைமட்டுமல்ல உன்போன்ற உயிர்களும் தான்’ போன்ற பதாதைகளை பெண்கள் ஏந்தியிருந்தனர்.
இதேவேளை குறித்த இறுதிச்சடங்கு நிகழ்வில் உயிரிழந்த பெண்ணின் கணவரோ, அல்லது கணவரின் குடும்ப உறவினர்களோ கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.