மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சொட்டிபாளையம் கிராமத்தில் கடந்த சனிக்கிழமை இரவு (22) வீட்டை உடைத்து கொள்ளையிட்ட கும்மலை திங்கட்கிழமை (24) மாலை கைது செய்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் 4 பேர் கொள்ளைச் சம்பவத்துடன் சம்மந்தப்பட்ட சந்தேக நபர்கள் எனவும், ஏனைய 4 பேரும் கொள்ளையர்கள் விற்ற பொருட்களை வாங்கியவர்கள் எனவும் தெரிவந்துள்ளது.
கொள்ளையர்களிடமிருந்து 31 பவுண் நிறையுடை தங்க நகைகளும், சுமார் இரண்டு இலட்சம் ரூபா பணமும், இரண்டு டிஜிட்டல் கமராக்கள், கைத்தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டதுள்ளதுடன் கொள்ளைக்குப் பயன்படுத்திய கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் அக்கரைப்பற்றுப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், இவர்களை அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் கொள்ளையிட்ட தங்க நகைகள் அக்கரைப்பற்றுப் பிரதேசத்திலுள்ள நகைக்கடை ஒன்றிலிருந்தும், ஓட்டமாவடிப் பிரதேசத்திலுள்ள நகைக்கடை ஒன்றிலிருந்தும் மிகுதி கொள்ளையர்களிடமிருந்தும் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நுவன் வெதிரிசிங்க, மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் நுவன் மென்டீஸ், களுவாஞ்சிகுடி பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஆர்.குமாரசிறி, ஆகியோரின் ஆலோசனையிலும், வழிகாட்டலின் கீழும், களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உப்புல் குணவர்த்தனவின் தலைமையில் துரிதமாகச் செயற்பட்ட பொஸ்ஸார் கொள்ளையர்களை மிகவும் நுட்பமான முறையில் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் களூவாஞ்சிகுடி, கல்முனை, அக்கரைப்பற்று போன்ற பல இடங்களில் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என விசாரணைகளிலிலிருந்து தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களிடம் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் மேலும் தெரவித்தார்.