பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் 16 ம் திகதிக்கு முன்னர் இடம்பெறாது என்று அரசாங்க ஊடக பேச்சாளர்களில் ஒருவரான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அரசாங்க ஊடக பேச்சாளர்களாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க மற்றும் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோர் இது தொடர்பாக கருத்து தெரிவித்தனர்.
பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு 126 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர் என்று செய்தியாளர் ஒருவர் சுட்டிக்காட்டிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
பாராளுமன்ற கூட்டத்தொடர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூ லம் அறிவித்துள்ளார் என்று அமைச்சர் மஹிந்த சமரவீர தெரிவித்தார்.
இதன் போது ஊடகவியலாளர் ஒருவர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டால் அரசாங்கத்தின் நடவடிக்கை என்ன என்று கேள்வி எழுப்பினார்.
அமைச்சர் மஹிந்த சமரசிங்க இது தொடர்பில் கூறுகையில் பாராளுமன்ற புதிய கூட்டத்தொடர் எதிர்வரும் 16 ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அன்றைய தினம் இது தொடர்பில் எதுவும் இடம்பெறாது. இதற்கு பின்னரே இது தொடர்பாக அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை குறித்து பெரும்பான்மையை நிரூபிக்க முடியும்.