அம்பாரை திருக்கோவில் பிரதேசசெயலகப் பிரிவுக்குட்பட்ட தங்கவேலாயுதபுரம் கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதி குன்றும் குழியுமாக இருப்பதனால் அவ் வீதியால் எவ்வித வாகனங்களும் செல்லமுடியாத நிலை எற்பட்டுள்ளதாக பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த வீதியானது திருக்கோவில் பொத்துவில் பிரதான வீதியின் தாண்டியடிச் சந்தியில் இருந்து மேற்குப்புறமாக சுமார் 6 கிலோமீற்றர் நீளமுடையதாகும்
கடந்த யுத்தத்தின் போது இடம்பெயர்ந்து 2006 ஆம் ஆண்டு மீளக்குடியேறியுள்ள இக்கிராம மக்களது அடிப்படைத் தேவைகள் சரியாக நிறைவேற்றப்படாமல் வாழ்ந்துவரும் இம்; மக்கள் நாளாந்தம் போக்குவரத்துச் செய்வதற்கு வீதி குன்றும் குழியுமாக இருப்பதனால் பொதுப் பேருந்து உரிய நேரத்திற்கு வருவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக இக்கிராமத்தில் இருக்கும் ஆரம்பப் பாடசாலையில் 1-5 வரையே கல்வி கற்க முடியும். பின்னர் 15 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில் கல்விகற்கவேண்டும.; இந்நிலையில் அக்கரைப்பற்றில் இருந்து காலையில் பேருந்து தங்கவேலாயுதபுரத்திற்கு வருகைதந்து காலை 7.10 இற்கு தங்கவேலாயுதபுரத்தில் இருந்து புறப்பட்டு அக்கரைப்பற்றுக்குச் செல்லும். பின்னர் பி.ப 2.30 இற்கு மீண்டும் தங்கவேலாயுத புரதத்திற்குச் செல்வது வழமை ஆனால் வீதி சீரின்மையால் பேருந்து தாமதமாகியே காலை வேளையில் திருக்கோவில் பிரதேசத்திற்குச் செல்வதாக தெரிவிக்கின்றனர்.
இதனால் பாடசாலை ஆரம்பித்து ஒரு பாடம் முடிவடைந்த பின்னரே பாடசாலைக்கு தங்களது பிள்ளைகள் செல்லவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படுவதாக பெற்றோர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.அத்தோடு எவ்வித தனியார் போக்குவரத்தும் இடம் பெறாமல் இருக்கும் இக்கிராமத்திற்கு பொதுப் போக்குவரத்து சீராக இடம்பெற வீதி சீராக அமைக்கப்பட்டு இருக்கவேண்டிய தேவையுள்ளது.
எனவே இதனைக் கருத்தில் கொண்டு பிரதான வீதியினைச் செப்பநிட்டு போக்குவரத்திற்கு சிறந்ததாக மாற்றித்தர அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்