HIV தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாடளாவிய ரீதியில் எச்.ஐ.வி. தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் ஒழிப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் கடந்த ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதிக்குள் 310 பேர், எச்.ஐ.வி தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

எனினும், கடந்த வருடம் 285 பேர் மாத்திரமே எச்.ஐ.வி. தொற்றுக்கு இலக்காகியிருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை, உலக எய்ட்ஸ் நாள் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாளான இன்று(சனிக்கிழமை) கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் ஒரு கருப்பொருளின் அடிப்படையில் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்நாள் எய்ட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.

எய்ட்ஸ் நாள் பற்றிய எண்ணக்கரு முதலாவதாக 1988-ல் நடைப்பெற்ற, எய்ட்ஸ் பற்றிய உலக சுகாதார அமைச்சர் மாநாட்டில் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts