இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமைக்கு மத்தியில், நாளைய தினம்(புதன்கிழமை) நாடாளுமன்றத்தில், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பொன்று நடத்தப்படவுள்ளது.
ஐக்கிய தேசிய முன்னணியினரால் கொண்டுவரப்படவுள்ள இந்தப் பிரேணைக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கவுள்ள அதேநேரம், ஜே.வி.பி. ஆதரவாக வாக்களிக்காது என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட புதிய அரசாங்கத்துக்கு எதிராக ஐக்கிய தேசிய முன்னணி, ஜே.வி.பியினரால் கொண்டுவரப்பட்ட நான்கு நம்பிக்கையில்லா பிரேரணைகளும், சபையில் பெரும்பான்மையான ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டன.
எனினும், இதனை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ச்சியாக தெரிவித்துவரும் நிலையிலேயே, நாளைய தினம் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
ஆனால், மஹிந்தவுக்கு எதிராக செயற்படுவோமே ஒழிய ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கமாட்டோம் என்ற கொள்கையில் இருக்கும் ஜே.வி.பி. இதற்கு ஆதரவளிக்காது என்று தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், ஜே.வி.பி.யின் 6 உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காவிட்டாலும் கூட, 117 எனும் பெரும்பான்மையுடன் நம்பிக்கை வாக்கெடுப்பை நிறைவேற்றுவோம் எ ஐக்கிய தேசிய முன்னணி நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.