தமிழர்களை தம் பக்கம் ஈர்க்க இராணுவம் சூழ்ச்சி: சி.வி.

வடக்கு- கிழக்கில் இராணுவத்தினர் முன்னெடுத்துவரும் செயற்பாடுகள், தமிழர்களை தம்பால் ஈர்க்கும் தந்திரோபாய செயற்பாடுகளாகும் என வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு- கிழக்கில் இராணுவத்தினரின் இருப்பு குறித்த வாரம் ஒரு கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வாரம் ஒரு கேள்வியில், வட கிழக்கில் இராணுவத்தினர் தொடர்ந்து குடியிருக்க எந்தவித காரணமும் இல்லை என்று அண்மையில் ஆங்கில பத்திரிகை ஒன்றிற்குக் கூறியுள்ளீர்கள். இதனால் அரசாங்கத்துடன் நீங்கள் முரண்டு பிடிப்பது மட்டுமன்றி குடியிருக்கும் இராணுவத்தினரை கோபமடையச் செய்துள்ளீர்கள். இவ்வாறான கூற்றுக்களைத் தவிர்த்திருக்கலாமே என்று கேள்வி தொடுக்கப்பட்டது.

இதற்கு பதலளித்த சி.வி., ‘அண்மைக் காலத்தில் இராணுவத்தினர் அவர்களது நடவடிக்கைகளை தந்திரோபாயமாக முன்னெடுத்து வருகின்றார்கள்.

வீடுகள் கட்டிக் கொடுப்பது, கிணறு வெட்டிக் கொடுப்பது, குளங்கள், கடலோரங்கள் போன்றவற்றை சுத்தப்படுத்திக் கொடுத்தல், வாழ்வாதாரங்கள் பெற்றுக் கொடுத்தல், வெசாக் பண்டிகை போன்ற தினங்களில் கௌதமரின் பெயரைச் சொல்லி களியாட்டங்களையும், உணவகங்களையும் நடத்துவது போன்ற நடவடிக்கைகளால் மக்களைத் தம்பக்கம் திருப்பும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இது ஒரு ஆபத்தான நடவடிக்கை. தந்து தந்து எம்மைத் தம்பால் ஈர்த்து வருகின்றார்கள். இதற்கு அவர்கள் எதிர்பார்க்கும் ‘விலை’ தம்மைத் தொடர்ந்து இங்கிருக்க எம் மக்கள் குரல் கொடுக்க வேண்டும் என்பதே.

அத்துடன், பௌத்தத்தைப் பரப்புவதிலும் கண்ணுங் கருத்துமாக உள்ளார்கள். அண்மையில் எமது மாகாண உயரதிகாரி ஒருவர் ‘கடற்படையினரை வெளியேற வேண்டும் என்று முல்லைத்தீவு மக்கள் கோரவில்லை. அரசியல்வாதிகளே கோருகின்றார்கள்’ என்று கொழும்பில் கூட்டமொன்றில் உரக்கக் கூறியுள்ளார்;;. இவரைப்போன்றவர்கள் இருக்கும் வரையில் எம்மால் படையினரை வெளியேற்ற முடியாது. படையினரை வெளியேற்றாவிட்டால் வடக்கு கிழக்காகிவிடும்.

எனவே எம் மத்தியில் இராணுவத்தினர் இருந்து ஈடுபடும் நடவடிக்கைகள் பற்றி எல்லோருந் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பௌத்தர்கள் இல்லா இடங்களில் புத்த சிலைகளை நிறுவ உதவி புரிவது இராணுவம்.

மகாவலி சபையினருடன் சேர்ந்து சிங்கள குடியேற்றங்களை வடமாகாணத்தினுள் ஏற்படுத்துவது இராணுவம். தெற்கத்தையரைக் கொண்டுவந்து சட்டத்திற்குப் புறம்பான மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வைப்பது படையினரே. இவ்வாறே தொடர்ந்து படையினர் வடமாகாணத்தில் நிலை கொண்டால் நடக்கப்போவது என்ன என்பதை நீங்கள் யூகித்து அறிய வேண்டும். வடக்கு கிழக்காக மாறா பத்துவருடம் போதும்.’ என்றும் கூறினார்.

Related posts