ஜனாதிபதியின் பணிப்பின்பேரில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பொதுமக்களின் 8.5ஏக்கர் காணிகள் தேசிய நல்லிணக்க முறையில் இராணுவத்தால் விடுவிக்கப்பட்டது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் துரித வழிகாட்டல்களின் மூலம் பாதுகாப்பு படைகளால் பயன்படுத்தி வந்த பொதுமக்களின் காணிகள் இன்று(27)பிற்பகல் 4.00 மணியளவில் கிழக்கு மாகாண இராணுவ கட்டளையிடும் தளபதியினால் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகம அவர்களிடம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டது.
இந்நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகம,பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன்,கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி கே.பி.ஏ.ஜெயசேகர,கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டீ.எம்.எஸ்.அபகுணவர்த்தன,கிழக்கு மாகாண காணி ஆணையாளர் டீ.டீ.அனுர தர்மதாச,கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.அஸீஸ்,ஆளுநர் செயலாளர் அசங்க அபேவர்த்தன,கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணன்,மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன்,திணைக்களத்தலைவர்கள்,மாவட்ட திட்டப்பணிப்பாளர்,உத்தியோகஸ்தர்கள், இராணுவத்தினர்,உயர் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான்குளம் இராணுவ முகாம், ஓந்தாச்சிமடம் இராணுவ முகாம்,கொக்கட்டிச்சோலை இராணுவ முகாம் போன்ற பொதுமக்களின் காணிகள் மற்றும் தோணிதாண்டமடு போன்ற காணிகள் இராணுவத்தால் விடுவிக்கப்பட்டு ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டு மீண்டும் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்,மகாவலி அதிகாரசபையிடம் கையளிக்கப்பட்டது.