வடக்கு, கிழக்கு மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீட்மைப்புத் திட்டத்தில், முதல் கட்டமாக, 4,750 வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிகப்படவுள்ளதாக, தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் இன்று (15) ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும், இந்த வீடுகள் 550 சதுரஅடி பரப்பளவில் அமையவுள்ளதாகவும் இவற்றுக்கான கொடுப்பனவுகள் கட்டம் கட்டமாக வேலைகளின் அடிப்படையில் பயனாளிகளுக்கு வழங்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 1,500 வீடுகளும் கிளிநொச்சியில் 670 வீடுகளும்,முல்லைத்தீவில் 630 வீடுகளும் வவுனியாவில் 450 வீடுகளும் மன்னாரில் 350 வீடுகளும் மட்டக்களப்பில் 625 வீடுகளும் திருகோணமலையில் 400 வீடுகளும் அம்பாறையில் 125 வீடுகளும் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, ஆரம்ப கட்டமாக முதல் 4 மாத கால வேலைத்திட்டத்தின் கீழ், இந்த வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக, அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.