அம்பாறை, கல்முனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மருதமுனை மேட்டு வட்டையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுனாமி வீட்டுத்திட்டத்தில், இதுவரையில் வழங்கப்படாமல் உள்ள வீடுகளை வழங்குமாறு, பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மருதமுனை பிரதேசத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக அரசாங்கத்தால் நிர்மாணிக்கப்பட்ட 176 வீட்டுத்திட்டத்தில் 100 வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள போதிலும், மிகுதி வீடுகள் மிக நீண்ட காலமாக உரிய மக்களுக்கு வழங்கப்படாமல் உள்ளதால் அவ்வீடுகள் தற்போது பாழடைந்து காணப்படுவதாகவும், இரவு வேளையில் நாசகாரச் செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும், இதனால் இப்பிரதேசத்தில் அச்ச நிலை காணப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
மிகுதியாயுள்ள வீடுகளையும் உரிய பயனாளிகளுக்கு வழங்குவதற்கு, அம்பாறை மாவட்ட செயலகத்திலும் கல்முனை பிரதேச செயலகத்திலும் நேர்முகப் பரீட்சைகள் நடைபெற்றும் இதுவரை இவ்வீடுகள் கிடைக்கவில்லையென, பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
சுனாமியால் பாதிக்கப்பட்டு இதுவரையும் வீடுகள் கையளிக்கப்படாத மக்கள் வாடகை வீடுகளிலும் உறவினர்களின் வீடுகளிலும் வசித்து வருவதால் பல்வேறு அசௌகரீங்களை எதிர்கொள்வதாகவும் அம்மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, இவ்வீடுகளை உரிய பயனாளிகளுக்கு வழங்குவதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒவ்வொரு வீடும் சகல வசதிகளுடன் சுமார் 10 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.