முள்ளிவாய்க்கால் ஒன்பதாவது ஆண்டு நினைவு நடத்துவதற்கு யார் தலைமை ஏற்பது யார் ஏற்பாடு செய்வது என்ற போட்டி தற்போது வடமாகாணத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது ஆனால் முள்ளிவாய்கால் முதலாவது நினைவு கடந்த 2010 மே 18,,ம் தினத்தில் பல கெடுபிடிகள் அச்சுறுத்தல் மத்தியில் அந்த உன்னத நிகழ்வை உணர்வுபூர்வமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்தேசியகூட்டமைப்பினராகிய நாம் மட்டுமே நடத்தினோம் இலங்கையில் வேறு எந்த இடத்திலும் முதலாவது முள்ளிவாய்க்கால் நினைவு அச்சத்தால் அனுஷ்டிக்கவில்லை என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசுக்கட்சி தலைவருமான பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தெரிவித்தார்.
நாற்பதுவட்டை கிராமத்தில் இன்று 08/05/2018,இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் தொடர்ந்து கூறிய அவர் விடுதலைப்போராட்ட வரலாற்றில் மிகப்பெரிய இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை இடம்பெற்றது இந்தப்படுகொலை அழிவுடன் எமது இனத்தின் ஆயுத ரீதியான அரசியல் போராட்டம் மௌனிக்கப்பட்டது வடகிழக்கு தாயகம் எங்குமே மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல் மக்கள் நாலா திசையும் அலைந்து அகதி வாழ்க்கை நடத்தியதும் வவுனியா மன்னார் மாவட்டங்களில் முள்ளுக்கம்பி வேலிகளுக்கு எமது மக்கள் மந்தைகளைப்போல் அடைக்கப்பட்டு சித்திரவதைகள் செய்த வரலாறுகளையும் நாம் மறக்கமுடியாது இந்த இக்கட்டான காலத்தில் முள்ளிவாய்க்கால் முதலாம் ஆண்டு நினைவை வடமாகணத்தில் எந்த இடத்திலும் நினைவுகூர முடியாத மகிந்த அரசின் கெடுபிடி ஆட்சியும் இராணுவ புலனாய்வாளர்களின் அடக்குமுறையும் தலைவிரித்தாடிய சூழலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களாக 2010,ம் ஆண்டு பணியாற்றிய நானும்(அரியநேத்திரன்) செல்வராசா அண்ணரும்,யோகேஷ்வரன் ஐயாவும் துணிந்து முள்ளிவாய்கால் நினைவை கொக்கட்டிச்சோலை ஶ்ரீ தான்தோன்றீஷ்வரர் ஆலயத்திலும்,மாமாங்கேஷ்வரர் ஆலயத்திலும் நடத்தியிருத்தோம் அன்றய முதலாம் ஆண்டு நிகழ்வை நடத்தியபோது பெரும் எண்ணிக்கையான புலனாய்வாளர்கள் எம்மை சூழ்ந்து கொண்டு அவதானித்தது மட்டுமன்றி எமது ஆதரவாளர்களை நேரடியாக அச்சுறுத்தி நிகழ்வுக்கு வருவோரை தடுத்து திருப்பி அனுப்பியதையும் நான் நினைத்துப்பார்கிறேன்.
அன்று 2010 மே 18 தொடக்கம் கடந்த 2017மே18,வரையும் தொடர்ச்சியாக இடைவிடாது மட்டக்களப்பு மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வணக்க நிகழ்வை தமிழ்தேசிய கூட்டமைப்பினராகிய நாம் நடத்திவருகின்றோம் 2015மே 18 வரை ஆறு நிகழ்வுகளும் இராணுவ அச்சுறுத்தல் மத்தியில் தடைகள் மத்தியில் எச்சரிக்கை மத்தியில் எதற்கும் முகம் கொடுத்து துணிந்து அந்த ஆறு நிகழ்வுகளை நாம் நடத்தியபோதும் 2016,2017,ஆகிய இரண்டு ஆண்டுகள் மட்டுமே எந்த ஒரு கெடுபிடிகளும் இல்லாமல் எம்மால் முள்ளிவாய்க்கால் நினைவு நிம்மதியாக செய்யக்கூடிய சூழ்நிலை மட்டக்களப்பு மாவட்டத்தில்ஏற்பட்டது.
கடந்த 2016 மே 18ல் நான் முள்ளிவாய்காலுக்கு நேரடியாச்சென்று வணக்கநிகழ்வுகளில் கலந்து கொண்டு அன்று பிற்பகல் கிளிநொச்சியில் என்னால் இயற்றப்பட்டு மட்டுநகர் செல்வகுமாரால் இசையமைத்து பாடப்பட்ட “முள்ளிவாய்கால்நினைவு காவியச்சிந்து” ஒன்றையும் வெளியிட்டுவைத்த பெருமை எனக்கே உள்ளது. உலகத்தமிழர்கள் அனைவரும் முள்ளிவாய்க்கால் நினைவு நாளை தற்போது எல்லா நாடுகளிலும் மனதார நினைவுகூருவதை நாம் அறிகிறோம்.
இந்த வருடம் ஒன்பதாவது ஆண்டு நிகழ்வு மிகவும் பேரழுச்சியாகவும் உணர்வுபூர்வமாகவும் முள்ளிவாய்க்காலில் நடத்த பலரும் முயற்சிகளை மேறகொள்கின்றனர் இதில் வடமாகாண முதலமைச்சர் தமது வடமாகாண அரசு ஊடாக நடத்தவேண்டும் என்ற வேண்டுகோளும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தாமே ஏற்பாட்டாளர்கள் என்று அறிக்கைவிட்ட நிலையும் சில அரசியல் கட்சிகள் குறிப்பிட்டு சிலரை வரவேண்டாம் என்று கூறும் நிலையும் இன்னும் சிலர் இது அரசியல் நிகழ்வாக மாற்றக்கூடாது பொதுவான ஒரு வணக்க நிகழ்வு மட்டுமே என்ற விதிமுறைகளை கூறுவதையும் இன்னும் ஒருசாரார் யாரும் வரலாம் அரசியல்வாதிகள் உரையாற்றக்கூடாது என்ற நிபந்தனைகளை முன்வைப்பதையும் இந்த ஒன்பதாவது முள்ளிவாய்க்கால் நினைவுக்கு கட்டுப்பாடுகளும் விமர்சனங்களும் என்றும் இல்லாதவாறு தற்போது அதிகரித்துள்ளது.
இந்த கருத்துக்களை ஆராயும்போது வடமாகாணத்தில் இன்றய அரசியல் சூழல் என்பது ஒரு தலைமையில் இல்லை பல
அரசியல் தமிழ் தலைமைகள் அந்தந்த கட்சி சார்ந்த ஆதரவாளர்களும் குறைந்தது இந்த முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை ஒற்றுமையாக ஒரு இடத்தில் இருந்து பேசி ஒரு முடிவை எடுக்கமுடியாதுள்ளனர் என்பதே வடமாகாண முதலமைச்சர் விக்கினேஷ்வரன் ஐயாவின் கருத்தில் இருந்து உணரக்கூடியது.
என்னைப்பொறுத்தவரை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை என்பது ஒரு தமிழின விடுதலை அரசியல் செயல்பாடுகளை பொறுத்துக்கொள்ளாத இனவாத இலங்கை அரசின் மிக மோசமான மிருகத்தனமான இனப்படுகொலைஎன்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை அதாவது முள்ளிவாய்க்கால் அவலம் அரசியல் சார்ந்த இனப்படுகொலைதான் அரசியலுக்கான அவலம்தான் இது அபிவிருத்திக்கான அவலமோ அபிவிருத்திக்கான படுகொலையோ வாழ்வாதாரத்திற்கான படுகொலையோ இல்லை என்பதை நாம் ஒவ்வொருவரும் உணரவேண்டும் முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவுகள் அரசியல் சார்ந்த நினைவாக நினைவுகூரும்போதுதான் அந்த வரலாறுகள் எமது இளம் தலைமுறைக்கு இலகுவாக சேரும் அதைவிட சர்வதேசத்திற்கும் அரசியல் ரீதியாக முள்ளிவாய்க்கால் நினைவுநாளில்
வடகிழக்கு தமிழ்மக்களால் இனப்படுகொலைக்கான நீதி வேண்டும் என்ற குரல் அரசியல்மூலமாக அனைத்துல சமூக அரசியல் தலைவர்களுக்கும் சென்றடையும்
முள்ளிவாய்க்கால் நினைவு குறுகிய அரசியல் நோக்கமற்றது என்பதற்கு அப்பால் முள்ளிவாய்க்கால் நினைவு பரந்த அரசியல் நோக்கம் உள்ளது என்ற உண்மையை மறுதலிக்கமுடியாது எனவும் பா.அரியநேத்திரன் மேலும் கூறினார்.