வசதி குறைந்த மாணவர்களுக்காக மட்டக்களப்பு மாநகரசபையால் இலவச நீச்சல் பயிற்சிகள்.
மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் வதியும் வசதி குறைந்த மாணவர்களின் நலன் கருதி வெபர் விளையாட்டு மைதானத்தில் இலவச நீச்சல் பயிற்சிகள் ஆரம்பிக்கப்படுள்ளதாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்தார்.
பிள்ளையாரடி நல்லையா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு விழா(5) பாடசாலை அதிபர் வே.பிரபாகரன் தலைமையில் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் அனைவரும் கல்வியில் சாதிக்கவேண்டும் என்ற உணர்வுடன் கற்க வேண்டும். இன்று பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் கையடக்க தொலைபேசி, சினிமா, உள்ளிட்ட தகவல் தொழிநுட்ப யுகத்திற்குள் மூழ்கிக்கொண்டு மீளமுடியாமல் தத்தளிக்கின்றார்கள். இதனால் மாணவர்களின் கல்வியும், விளையாட்டின் மீதான ஆர்வமும் வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளன.
எமது மாவட்டத்தின் விளையாட்டு வீரர்களை இனங்கண்டு அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். வசதிகுறைந்த பல மாணவர்கள் திறமையிருந்தும் பயிற்சிகளை மேற்கொள்ள முடியாமல் இருக்கின்றார்கள். இவ்விடயத்தில் எமது மாநகரசபையானது விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் ஓர் நிலையியற் குழுவினை ஸ்தாபித்துள்ளது. அக்குழுவானது மாநகர எல்லைக்குள் பல செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.
குறிப்பாக எமது பிரதேசத்தில் நீச்சல் விளையாட்டு வீரர்களை உருவாக்கும் பொருட்டு மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் இலவச நீச்சல் பயிற்சியை ஆரம்பித்துள்ளோம்.அதற்காக அனுபவம் வாய்ந்த திறமையான பயிற்சியாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பிற்பகல் 4மணி தொடக்கம் 6மணி வரை இவ் இலவச நீச்சல் பயிற்சியானது இடம்பெற்று வருகின்றது. இதனையும் இப்பிரதேசத்தில் உள்ள மாணவர்கள் பயன்படுத்தலாம் எனத்தெரிவித்தார்.