மட்டக்களப்பு மாநகர சபையின் 59வது அமர்வு… முதல்வரால் மீளப்பெறப்பட்ட அதிகாரங்கள் புதிய ஆணையாளருக்கு மீளக் கையளிப்பு

மட்டக்களப்பு மாநகர சபையின் 59வது அமர்வு இன்றைய தினம் மட்டக்களப்பு மாநகர சபையில் மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது.
 
இதன்போது மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன் உட்பட மாநகரசபை உறுப்பினர்கள், மாநகரசபையின் புதிய ஆணையாளர் என்.மதிவண்ணன், பொறியியலாளர், நிருவாக உத்தியோகத்தர் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
 
மாநகரசபையின் சம்பிரதாய விடயங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட அமர்வின்போது மாநகர சபைக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய ஆணையாளரான என்.மதிவண்ணன் அவர்கள் முதல்வரினால் வரவேற்கப்பட்டதுடன், கடந்த சபை அமர்விற்கான கூட்டறிக்கை, முதல்வரின் அறிவிப்புகள், சபைக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய நிதிக் குழுவின் சிபாரிசுகள், முதல்வரின் முன்மொழிவுகள் மற்றும் உறுப்பினர்களின் பிரேரணைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கான அங்கீகாரங்களும் பெறப்பட்டன.
 
பின்னர் மாநகரசபையினால் முன்னாள் ஆணையாளரான எம்.தயாபரன் அவர்களிடமிருந்து மீளப்பெறப்பட்ட அதிகாரங்கள் தற்போது புதிதாக நியமிக்கப்பட்ட ஆணையாளருக்கு மீளக் கையளிக்கப்பட்டதுடன் உள்ளுராட்சி ஆணையாளரின் கடிதத்தின் பிரகாரம் மாநகரசபையின் பதில் செயலாளர் கடமைப் பொறுப்பும் மீள புதிய ஆணையாளருக்கு கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts