பாதிக்கப்பட்ட பண்ணையாளர்களுக்கு நஸ்டஈடு பெற்றுக்கொடுக்க கிழக்கு மாகாண ஆளுநர் கவனம் செலுத்தப்பட வேண்டும்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பண்ணையாளர்களுக்கு நஸ்டஈடு வழங்குவதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் கவனம் செலுத்தப்பட்டு அரசு நஸ்டஈடு பெற்றுக் கொடுக்கபடவேண்டும்.
பூ.பிரசாந்தன் தெரிவிப்பு.

மட்டக்களப்பு மாவட்டத்தில்  உள்ள பண்ணையாளர்களின் பசுமாடுகள் தொடர்ச்சியாக பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள தொற்றுநோயினால் இறந்து வருகின்றது.இவ்விறப்பு தொடர்பாக ஆராயும் முகமாக தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர்  கிரான் மயிலத்த மடு,தொப்பிக்கலை,குடிம்பிமலை உள்ளிட்ட பகுதிக்கு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர் வியாழக்கிழமை (28)திடீர் விஜயம் செய்து பாதிக்கப்பட்ட பண்ணையாளர்கள்,வைத்திய அதிகாரி உள்ளிட்டோரிடம்  கலந்துரையாடி நிலமையினை கேட்டறிந்ததாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அமைச்சின் செயலாளர்களுடன் கலத்துரையாடியதாகவும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன்  தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பண்ணைகளின் கால்நடைகள் இறப்புக்கள்  சம்பந்தமாக மேலும் தெரிவிக்கையில்:- 

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்மக்களின்  ஜீவனோபாயத் தொழிலான கால்நடை வளர்ப்புத்தொழில் பல்வேறு பிரச்சனைகளை  எதிர்நோக்கி வருகின்றது.இத்திடீர் இறப்பினால் நூற்றுக்கணக்கான பண்ணையாளர்களின் ஆயிரக்கணக்கான பசுமாடுகள் உயிரிழந்துள்ளது.

இப் பாரிய கால்நடை இறப்புநோயை கட்டுப்படுத்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட வேண்டுமெனவும்,பாதிக்கப்பட்ட பண்ணையாளர்களுக்கு நட்டஈடுவழங்க அரசு முன்வருவதுடன் மிகநீண்டகாலமாக தீர்க்கப்படாமலுள்ள மேய்ச்சல் தரைப்பிரச்சனைக்கும் தீர்வுகாணப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பண்ணையாளர்களின் பெயர்பட்டியலை கால்நடை திணைக்களம் குறுகிய காலத்தில் தயாரித்து கிழக்கு மாகாண ஆளுநருக்கு தெரியப்படுத்த வேண்டும்.இவ்விடயமாக கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா கிழக்கு மக்களின் நன்மைகருதி நஸ்டஈடு பெற்றுக்கொடுக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இத்திடீர் விஜயத்தின் போது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தலைமையில் பிரதித்தலைவர் க.யோகவேள்,கோரளைப்பற்று பிரதேச சபைத்தவிசாளர் திருமதி.சோபா ஜெயரஞ்சீத் பிரதேச சபை உறுப்பினர்களான திருநாவுக்கரசு,கிருபாகரன் ,நடராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related posts