அம்பாறை மாவட்டத்தில் உச்சம் தொட்ட கொவிட் தொற்றாளர்கள். கடந்த 24 மணி நேரத்தில் 411 கொவிட் தொற்றாளர்கள் அடையாம்

அம்பாறை மாவட்டத்தில் என்றுமில்லாதவாறு கொவிட் தொற்றாளர்களின் பரம்பல் அதிகரித்து வருகின்றது. ஒரே தினத்தில் இம்மாவட்டத்தில் 411 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதுவே இம்மாவட்டத்தின் உச்சம் தொட்ட கொவிட் எண்ணிக்கையாகும்.
அம்மாறை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தினுள் தொற்றுக்குள்ளானோரில் 261 தொற்றாளர்கள் அம்பாறை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பிரிவில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கல்முனை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 150 கொவிட் தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.
இக்கால கட்டத்தில் கல்முனைப் பிராந்தியத்தில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை உச்சம் தொட்ட எண்ணிக்கை 150 ஆக உள்ளது. இது மிகப் பாரதூரமான விடயமாகும். மக்கள் அலட்சியப் போக்குடன் செயற்படாது மிகக் கவனமானதும் இறுக்கமானதுமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவது காலத்தின் தேவையாகும் என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.
கடந்த 24 மணி நேரத்தில் கல்முனை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இரு மரணங்கள் நிகழ்ந்துள்ளன. காரைதீவு பிரதேசத்தில் 70 வயதுடைய பெண் ஒருவர் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்நோய்த் தொற்றினால் உயிரிழுந்துள்ளார். அத்தோடு, திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 84 வயதுடைய வயோதிப ஆண் ஒருவர் வீட்டில் இருந்தவாறு இந்நோய்த் தொற்றின் மூலம் உயிரிழந்துள்ளார்.
எமது பிராந்தியத்தில் உள்ள மக்கள் கொவிட் நோயினை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாமல், இந்நோய் தொடர்பில் மிகுந்த கரிசனையுடனும் அவதானத்துடனும் செயற்பட வேண்டும். உலகமே அச்சத்தில் உறைந்துள்ளபோது எமது பிராந்தியத்தில் கொவிட் தொற்று உச்சம் தொட்டிருப்பது தொடர்பில் மக்கள் இந்நோய் தொடர்பில் அலட்சயப் போக்கினைக் கைவிட்டு சுகாதார பாதுகாப்புடன் செயற்பட வேண்டும்.
கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை எல்லைக்குட்பட்;ட 13 பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் இதுவரை 98 மரணம் நிகழ்ந்துள்ளது. இப்பிராந்தியத்தில் 4746 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 40 தொற்றாளர்களும், அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 19 கொவிட் தொற்றாளர்களும், சம்மாந்துறை பிரதேசத்தில் 18 தொற்றாளர்களும் கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ளனர்.
கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 16 தொற்றாளர்களும்,; பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 15 தொற்றாளர்களும், நிந்தவூர்; பிரதேசத்தில் 12 தொற்றாளர்களும், காரைதீவு மற்றும் திருக்கோவில் ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா ஏழு பேரும், அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஐவரும், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு, சம்மாந்துறை மற்றும் ஆலையடிவேம்பு ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா மூவரும் என கடந்த 24 மணி நேரத்தினுள்  இப்பிராந்தியத்தில் 150 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர் எனவும் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன் மேலும் தெரிவித்தார்.

Related posts