கல்முனை கல்வி வலயத்தில் நிலவும் கோட்டக் கல்வி அதிகாரி பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்காக, நாளை (21) இடம்பெறவிருந்த நேர்முகப் பரீட்சை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜீ.முத்து பண்டா அறிவித்துள்ளார்.
கல்முனை கல்வி வலயத்துக்குட்பட்ட கல்முனை முஸ்லிம் பிரிவு, கல்முனை தமிழ் பிரிவு, சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர் ஆகிய ஐந்து கோட்டக் கல்வி பணிமனைகளுக்கான அதிகாரிகளை நியமிப்பதற்காக கிழக்கு மாகாண கல்வி அமைச்சால் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.
இதன்பிரகாரம், தகுதியானவர்களை தெரிவுசெய்வதற்காக, நாளை நேர்முகப் பரீட்சை நடைபெறுமென, சம்மந்தப்பட்டவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த பதவிக்காகக் கோரப்பட்ட விண்ணப்ப விளம்பரத்தில், இலங்கை கல்வி நிர்வாக சேவை மூன்றாம் வகுப்பைச் சேர்ந்தோர் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டிருந்தமை தவறு எனவும் அது இலங்கை கல்வி நிர்வாக சேவை பொது ஆளணியைச் சேர்ந்தோர் என்று திருத்தப்பட வேண்டும் எனவும் அங்கிகரிக்கப்பட்ட புள்ளித்திட்டம், குறித்த விளம்பரத்தில் வெளிப்படுத்தப்பட வேண்டும் எனவும் இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம், கிழக்கு மாகாண ஆளுநரிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
இதனையடுத்து, இலங்கை கல்வி நிர்வாக சேவை பிரமாணக் குறிப்பு ஏற்பாடுகளுக்கமைய, குறித்த பதவிக்கு மீண்டும் விண்ணப்பங்களை கோருமாறு ஆளுநர் விடுத்த பணிப்புரைக்கமைவாக, இந்நேரமுகப் பரீட்சை இரத்துச் செய்யபட்டிருப்பதாக அறிவிக்கப்படுகிறது.