பெண்களுக்கென வெகு விரைவில் தனியான பஸ் சேவை ஆரம்பிக்கப்படுமென போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் மேற்பார்வை எம்.பி ஹிருனிக்கா பிரேமச்சந்திர பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ரயில்களில் பெண்களுக்கென தனித்துவமான ரயில் பெட்டிகள் ஒதுக்கப்பட்டதற்கு பெண்களிடமிருந்து பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் இதனைத் தொடர்ந்து பெண்களுக்கென தனியான பஸ் சேவையை ஆரம்பிப்பதற்கு போக்குவரத்து அமைச்சர் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, துறைமுகங்கள், கப்பல்துறை அலுவல்கள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான விவாதத்தில் அமைச்சர் ஹிருனிக்கா உரையாற்றினார். இதன்போது அவரை குறுக்கிட்ட கனக ஹேரத் எம்.பி பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட ரயில் பெட்டிகள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட வில்லையென்றும் அத்திட்டம் படு தோல்வி கண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
அதற்குப் பதிலளித்த போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, பெண்கள் தினத்தையிட்டு அதன் முதற்கட்டமே ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் இச்சேவை தொடர்ந்து அமுல்படுத்தப்படுமென்றும் தெரிவித்தார்.