தரம் 5புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றுவது கட்டாயமல்ல என தெரிவித்து கல்வி அமைச்சினால் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
தரம் 5புலமைப்பரிசில் பரீட்சையானது, மாணவர்களுக்கு சுமையாக்கப்பட்டு வருகின்றமை உள்ளிட்ட காரணங்கள் கருதி, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசமின் உத்தரவுக்கு அமைய, கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என். ரணசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ள, 08/2019எனும் சுற்றறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரம் 5புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் ஏற்கனவே கடந்த 1995ஜூன் மாதம் 09ஆம் திகதி வெளியிடப்பட்ட, 1995/16எனும் சுற்றறிக்கை செல்லுபடியற்றதாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள, 08/2019எனும் குறித்த சுற்றறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தில் கல்வி கற்கும் திறமை வாய்ந்த மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்குவதற்காகவும் தரம் 6இற்கு மாணவர்களை தெரிவு செய்வதற்காகவும், தரம் ஐந்து புலமை பரீட்சை வருடாந்தம் இடம்பெற்று வருகின்றது.
ஆயினும் தற்பொழுது புலமைப்பரிசில் பரீட்சை அதன் அடிப்படைக் கொள்கையிலிருந்து விலகி, மாணவர்களின் பல்வகைத் தன்மை மற்றும் அறிவு மட்டம் உள்ளிட்ட விடயங்களை கருத்திற் கொள்ளாது, அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் நேரடியாக அல்லது மறைமுகமாக அனாவசியமான போட்டித் தன்மை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சிறுவர் மனநல வைத்தியர்கள் மற்றும் கல்வியாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
அதற்கமைய இனிமேல், பாடசாலைகளில் தரம் 5இல் கல்வி கற்கின்ற, புலமைப்பரிசிலுக்கு தோற்றுவதற்கு உரித்துடைய வருமான எல்லைக்கு உட்பட்ட, குறைந்த வருமானத்தைக் கொண்ட மாணவர்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து மாணவர்களும் குறித்த பரீட்சையில் தோற்றுவது கட்டாயமல்ல என்பதோடு, அதற்காக மாணவர்களை எவ்வகையிலும் வற்புறுத்தக் கூடாது என இதன் மூலம் அறியத்தரப்படுகின்றது.
அத்துடன் மாணவர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்றவாறு புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றாதிருப்பதற்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதோடு அது தொடர்பில் பெற்றோரை விழிப்புணர்வூட்டி, பெற்றோரின் சம்மதம் தொடர்பான தகவல்களை உள்ளடக்கிய கோப்பு ஒன்றை பாடசாலையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
மேலும் தரம் 5புலமைப்பரிசில் பரீட்சையை அடிப்படையாகக் கொண்டு, போட்டித் தன்மையை ஏற்படுத்தும் வகையிலான சுவரொட்டிகள், பதாதைகள், பெனர்கள் போன்ற விளம்பர செயற்பாடுகள் மேற்கொள்ளப்படக் கூடாது எனவும் குறித்த சுற்றறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பாடசாலைக்கு ஆறாம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ளும்போது, உரிய சுற்றறிக்கையிலுள்ள ஆலோசனைகளின் அடிப்படையில் வசதிகள் மற்றும் சேவைக் கட்டணம், பாடசாலை அபிவிருத்தி சங்க கட்டணம் போன்ற அனுமதிக்கப்பட்ட கட்டணங்கள் தவிர்ந்த வேறு நிதிகளை அறவிடுதல் அல்லது பரிசாக பெற்றுக் கொள்வது முற்று முழுதாக தடை செய்யப்பட்டுள்ளதாக குறித்த சுற்றுநிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.