மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொதுமக்களின் பிரச்சனையை வினைத்திறனுடனும்,விவேகமாகவும் செயற்பட்டு தீர்க்கப்படாத பிரச்சனைகளுக்கு தீர்வுகள் எட்டப்படவுள்ளது

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொதுமக்களின் பிரச்சனையை வினைத்திறனுடனும்,விவேகமாகவும் செயற்பட்டு தீர்க்கப்படாத பிரச்சனைகளுக்கு தீர்வுகள் எட்டப்படவுள்ளது.மட்டு அரசாங்க அதிபர் தெரிவிப்பு.

“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” எனும் தேசிய வேலைத்திட்டத்திட்டம் திங்கட்கிழமை முதல்  ஆரம்பமாகின்றது.எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி பங்குபற்றுதலுடன் நிறைவுபெறவுள்ளது.

இவ்வேலைத்திட்டத்தின் இறுதி நிகழ்வுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  எதிர்வரும் வெள்ளிக்கிழமை(12) மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகைதரவுள்ளார்.

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டும்,வேலைத்திட்டம் சம்பந்தமாகவும்,பிரதேச ஊடகவியலாளர்களுக்கு தெரியப்படுத்தும் ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தலைமையில்  ஞாயிற்றுக்கிழமை (7)  காலை 10.00 மணியளவில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.இவ் ஊடக மாநாட்டில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா புண்ணியமூர்த்தி, பிரதேச ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டார்கள்.

இதன்போது அரசாங்க அதிபர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்:-

ஜனாதிபதி செயலகத்தின் அனுமதியுடனும்,மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் நாளை திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை(8ம் திகதி முதல் 12ம் திகதி வரை) மாவட்டத்தில் 10வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தி பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது.

இவ்வேலைத்திட்டமானது மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும்  முறையாக  நடைமுறைப்படுத்தப்பட்டு பொதுமக்களின் பிரச்சனை தீர்வு பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது.

கிராமசக்தி,ஸ்மாட் ஸ்ரீலங்கா,விவசாய விஷேட வேலைத்திட்டம்,தேசிய சுற்றாடல் பிரச்சனை,உணவு உற்பத்தி, போதைப்பொருள் கட்டுப்படுத்தல்,சிறுநீர் நோய்தடுப்பு,சிறுவர்களுக்கான பாதுகாப்பு,நிலையான பாடசாலை அபிவிருத்தி,விஷேட தேவையுடையோர் மற்றும் முதியோருக்கான வேலைத்திட்டம் போன்றவற்றை பிரதேச செயலக மட்டத்திலும்,மாவட்ட மட்டத்திலும் நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.

1115 வேலைத்திட்டங்கள் மாவட்ட செயலகத்தினால் இனங்காணப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றது.சத்துருக்கொண்டான் கிராமத்தை உற்பத்தி கிராமமாக தெரிவு செய்யப்பட்டு 53 பயனாளிகளுக்கு பத்து இலட்சம் பெறுமதியான வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுகின்றது.ஒரு இலட்சம் பெறுமதியான 72 மலசலக்கூடம் கட்டிக்கொடுக்கப்படுகின்றது.சத்துருக்கொண்டான் குளம் புனரமைப்பு, ஓசானம் வீதி புனரமைத்தல்,சிறு முயற்சியாளர்களின் நன்மைகருதி 25 கடைத்தொகுதிகள் அமைக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளது.வீட்டுத்தோட்டம் அமைப்பதற்கு15 பயனாளிகளுக்கு 375,000 ரூபா ஒதுக்கப்பட்டு வேலைகள் நடைபெறுகின்றது.

மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு 15பயனாளிகளுக்கு  தோணிகளும்,35 குடும்பங்களுக்கு மீன்வலைகளும் வழங்கப்படவுள்ளது.ஜனாதிபதியின் தேசிய வேலைத்திட்டத்தின் பிரகாரம் நாடளாவிய ரீதியில் 50 நிலையங்களை உருவாக்கி கொடுக்கப்படவுள்ளது.இவற்றில் 4ஆவது நிலையத்தை மட்டக்களப்பில் திறந்து வைக்கப்படவுள்ளோம்.இதன் மூலம் தொழில் வழிகாட்டல்,தொழில் வாய்ப்பற்ற இளைஞர்கள்,யுவதிகள் வேலைவாய்ப்பு வெற்றிடங்களை இணையேற்றத்தில் பதிவு செய்து அவர்களுக்கு வேலைவாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுப்படவுள்ளது.

திணைக்களங்களின் அனுமதியுடன் காணியற்ற,வசதி குறைந்த 100 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளது.ரணவிரு திட்டத்தின் மூலம் வீட்டுத்திட்டம் வழங்கப்படவுள்ளது.விவசாய உற்பத்தியை ஊக்குவிக்குமுகமாக விவசாய உள்ளீடுகள்,உரமானியம் என்பன வழங்கி விவசாய உற்பத்தி அதிகரிக்கப்படவுள்ளது.சமுர்த்தி கடன்கள் வழங்கப்படவுள்ளது.வெபர் மைதானத்தில் கண்காட்சியும்,விற்பனையும் நடைபெறவுள்ளது.

இவ்வேலைத்திட்டத்தினால் மாவட்டத்தில் 175, 000 குடும்பங்கள் நன்மையடையவுள்ளார்கள்.கிராமசக்தி வேலைத்திட்டம் 161 கிராமங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வேலைகள் நடைபெறுகின்றது.இவ்வேலைகளை முன்னெடுப்பதற்கு கிழக்கு மாகாண சபை ஒரு கோடியே இருபது  இலட்சம் (102 மில்லியன் ரூபா)ஒதுக்கியுள்ளது.

ஜனாதிபதி செயலகம் மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வெபர் மைதானத்தில்  ஊடக மத்தியநிலையம் அமைத்து மாவட்டத்தின் வேலைத்திட்டங்களை நாளாந்தம் ஜனாதிபதி செயலகம், ஊடகங்களுக்கு தெரியப்படுத்தப்படவுள்ளோம்.

இவ்வேலைத்திட்டங்களுக்கு ஜனாதிபதி செயலகம், மத்திய அரசு,மாகாணசபை,திணைக்களங்களின் நிதிப்பங்களிப்புடன் நாட்டுக்காக ஒன்றிணைவோம் வேலைத்திட்டம் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டு பொதுமக்களின் பிரச்சனையை வினைத்திறனுடனும்,விவேகமாகவும் செயற்பட்டு தீர்க்கப்படாத பிரச்சனைகைள் தீர்வுகள் எட்டப்படவுள்ளது.

இறுதி நிகழ்விற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் வெள்ளிக்கிழமை(12)மட்டக்களப்பு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.காலை 10.00 மணியளவில்  மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளார்.இக்கூட்டத்திற்கு 14 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் சேர்ந்த 5000 பொதுமக்கள் கலந்துகொள்ளவுள்ளார்கள்.இக்கூட்டத்திற்கு வருகைதரும் பொதுமக்களுக்கு ஒவ்வொரு தென்னைக்கன்றும்,மரமுந்திரிகை கன்றும் வழங்கி வைக்கப்படவுள்ளது அரசாங்க அதிபர் மேலும் தகவல் தெரிவித்தார்

Related posts