யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்துள்ளது. எனினும், காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு இதுவரையில், தீர்வு வழங்கப்படாமை கவலையளிக்கிறதென உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறுத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில், அதில் பாதிக்கப்பட்டவர்களை மையப்படுத்திய அணுகுமுறைகளை கையாள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில், அரசாங்கம் முன்வைத்த கருத்துக்களும் கூட்டத் தொடர் நிறைவடைந்ததன் பின்னர் வெளியாகின்ற கருத்துக்களும் அதிருப்தியளிக்கும் வகையில் உள்ளது.
சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய நீதிப்பொறிமுறை உருவாக்குதல் உள்ளிட்ட பல பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் மூன்று முறை ஏற்றுக்கொண்டுள்ளதோடு, அப்பிரேரணைகளுக்கு இணை அணுசரணையும் வழங்கியுள்ளதால், அதன்படி, இலங்கை அரசாங்கம் நடந்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், சர்வதேச நீதிபதிகளை உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையில் இணைக்க முடியாதென வெளிவிவகார அமைச்சர் நாடாளுமன்றில் எடுத்துரைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.