பாதுகாப்பை விஸ்தரிக்கின்ற விடயங்களை அரசாங்கம் மிக அவதானமாக, நேர்மையாக மேற்கொள்ள வேண்டி உள்ளது, சாதாரண மக்களை மென்மையாக நடத்த வேண்டும், தமிழ் மக்களை வன்மையாக கையாண்ட வரலாற்று தவறு மீண்டும் செய்யப்படவே கூடாது என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும், உற்பத்தி திறன்கள் ஊக்குவிப்பு முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகு தாவூத் தெரிவித்தார்.
ஏறாவூரின் மூத்த கல்விமானும், சமூக முன்னோடியுமான காலம் சென்ற எம். ஏ. சி. ஏ. றகுமானின் நினைவேந்தல் நிகழ்வு ஏறாவூர் ஆற்றங்கரை முஹைதீன் ஜும் ஆப் பள்ளிவாசலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது. இதில் பேராளராக கலந்து கொண்டு பேசியபோது இவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-
றகுமான் சேர் ஒரு சமூகவியலாளர். மதம், இனம், மொழி போன்ற வேறுபாடுகளை கடந்தவர். மதத்தை அவருக்குள்ளேயே வைத்திருந்தவர். மதத்தை பரப்புரை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று நம்புபவர். ஆற்றல், அறிவு, ஆளுமை, ஞானம், சமூக பிரக்ஞை ஆகியவற்றை கொண்டிருந்த மிக உறுதியான ஊர் தலைவர் ஆவார். அவர் காட்டிய, கற்று தந்த வழிமுறைகள் கட்டாயம் மீட்கப்பட வேண்டிய கால கட்டத்தில் நாம் இருக்கின்றோம்.
ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு விதமான தலைமைகள் இருந்தன. அன்று உறுதியான ஊர் தலைமை காணப்பட்டது. ஆனால் பின்னர் இனம், மதம், மொழி, மதம், கலாசாரம் ஆகியவற்றின் அடிப்படைகளிலான அடையாள அரசியலால் நாம் தொலைத்த மிக முக்கியமான விடயங்களில் ஒன்றாக ஊர் தலைமை என்கிற அம்சம் காணப்படுகின்றது. அதன் பிரதிபலிப்பைதான் கடந்த 21 ஆம் திகதி நாம் பார்த்தோம். உறுதியான ஊர் தலைமை அற்று போய் எங்கிருந்தோ வருகின்ற உத்தரவுகளுக்கு செயற்படுகின்ற பலவீனமான தலைமைகளே இருக்கின்றன. பலமான, உறுதியான தலைமைகள் எமக்கு அருகில் இல்லாமல் தூர நிற்கின்றன
இன்று எமது முஸ்லிம் சமூகம் எம்மை நாமே மீள்பரிசோதனை செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. நாம் நடந்து, கடந்தும் வந்த பாதையை மீட்டு பார்க்க நேர்ந்து உள்ளது. இதற்காக எமது சமூகத்துக்குள் உள்ளக கலந்துரையாடல்கள் இடம்பெற்று குழு நிலை விவாதங்கள் நடத்தப்பட்டு நல்லவை, கெட்டவை ஆராயப்பட்டு பொருத்தமான தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும். எங்களுக்குள் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு நாம் கைக்கொள்ள வேண்டிய விடயங்கள், கை விட வேண்டிய அம்சங்கள், தொடர்ந்து கடைப்பிடிய நடைமுறைகள், மாற்ற வேண்டிய வழக்கங்கள் ஆகியவற்றை நாமே தீர்மானிக்க வேண்டும். ஏறாவூர் மண்ணில் இவ்வாறான ஒரு எழுச்சியை முதன்முதலில் ஏற்படுத்தி தந்தவர் றகுமான் சேர் ஆவார். எந்த தீர்மானம் எடுக்கப்பட வேண்டுமாக இருந்தால் ஊரை கூப்பிட்டு கூட்டம் போடுவதை அவர் வழக்கமாக கொண்டிருந்தார். ஆணைகளுக்கு அப்படியே அடி பணிந்து செயற்படுகின்ற அடிமை சமுதாயமாக நாம் இருக்க முடியாது. முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடித்தான் ஆடை அணிய வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லால் இருக்கலாம். ஆனால் முஸ்லிம் பெண்கள் முகத்தை மூட கூடாது என்று பலவந்தத்தாலோ, சட்டத்தாலோ நிர்ப்பந்திப்பதற்கு அரசாங்கத்துக்கு அதிகாரம் இல்லை என்பதை நான் உறுதியாக சொல்லி வைக்கின்றேன். தீர்மானிப்பவர்கள் நாமாகத்தான் இருக்க வேண்டும்.
ஒரு நாட்டில் பாதுகாப்பை விரிவுபடுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்படுகின்றபோது அந்த நாட்டில் ஒழுக்க அடிப்படைகள் சிதைக்கப்படுகின்றன. அச்ச பீதி குடி கொள்கின்றது. கோபம், பரஸ்பர விரோதம் அதிகரிக்கின்றது. தனிமை அதிகம் உணரப்படுகின்றது. மக்களின் வாழ்க்கை அழிவுபட்டு சிதைவுறுகின்றது. தமிழர்கள் கவனத்தில் கொள்ள தவறிய விடயமாகவும், முஸ்லிம்கள் இப்போது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விடயமாகவும் இது இருக்கின்றது. இது தொடர்பாக நாம் நமக்குள் உள்ளக கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டும். அரசாங்கம் சட்டம் போட்டு கட்டுப்படுத்துவதற்கு முன் நாமாக விழித்தெழுந்து செயற்பட வேண்டும். வலதுசாரிகள் அச்சம் ஊட்டுகின்ற ஒரு கருவியாக இஸ்லாத்தை உலகத்துக்கு காட்ட தொடங்கி உள்ளனர். பயம் காட்டுவதற்கு சிறந்த பூச்சாண்டியாக இஸ்லாத்தை வெளிக்காட்டி உள்ளனர். அச்சத்தை உற்பத்தி செய்கின்ற தொழிற்சாலை திறக்கப்பட்டு விட்டது. இஸ்லாமிய வெறுப்பு என்கிற பிரமாண்ட தொழிற்சாலை கட்டியெழுப்பப்பட்டு உள்ளது. இந்நிலையில் இதை விருப்பத்துக்கு உகந்த தொழிற்சாலையாக மாற்றுவது குறித்து முஸ்லிம்கள் அவசியம் உள்ளக கலந்துரையாடல்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கின்றது. ஒரு கூரையின் கீழ் இருந்து நமக்குள் நாம் பேசுதல் வேண்டும். முஸ்லிம்கள் மீது யாருக்கும் பயம் கிடையாது. ஆனால் முஸ்லிம்களை கொண்டு இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்களையும், முஸ்லிம் அல்லாதவர்களையும் அச்சமூட்டுகின்ற வேலையை அந்த தொழிற்சாலை நடத்துகிறது. மத்திய கிழக்கையும், ஆபிரிக்காவையும் அது சீரழித்து விட்டது. இப்போது தெற்காசியாவை பேயாட்டுகின்றது. எமது சமயத்தின் பெயரால் எவரோ எமது மூளையை கழுவி, எமது இதயத்தில் நச்சு இரத்தத்தை பாய்ச்சி, தற்கொலை குண்டுதாரிகளாக வெடித்து சிதறினால் சொர்க்கம் கிடைக்கும் என்று விசுவாசிக்க வைத்து, எம்மை இயக்குகின்றார்கள் என்றால் நாம் நம்மை பற்றி நிச்சயம் யோசிக்க வேண்டித்தான் இருக்கின்றது.
முஸ்லிம்களால்தான் அனர்த்தம் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது. ஆனால் நம் நாட்டில் முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களும் இடையில் எந்த சூழலிலும் முன் பகை, வைராக்கியம், காழ்ப்புணர்வு போன்றவை கிடையாது. இரண்டுமே சிறுபான்மை சமூகங்களாகும். ஆனால் இஸ்லாத்தின் பெயரால் வேறு ஆட்களால் முஸ்லிம் சமூகம் பயன்படுத்தப்பட்டு இருக்கின்ற பலவீனம் உள்ளங்கை நெல்லிக்கனியாக கண் முன் தெரிகின்றது. எத்தனை பேர் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றனர் என்கிற விடயம் முக்கியமானது அல்ல. ஆனால் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரித்து உள்ளன. கலவரங்கள், பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரித்த பின்னரே தமிழ் இளையோர்கள் சாரை சாரையாக இயக்கங்களில் சேர்ந்தனர். நாட்டில் இருப்பதை விட காட்டில் இயக்கத்துடன் இருப்பது பாதுகாப்பானது என்று முடிவெடுத்தார்கள். இதை முஸ்லிம் சமூகம் பாடமாக கொள்ள வேண்டி இருக்கின்றது. பாதுகாப்பு விஸ்தரிப்பு காரணமாக எமது சமூகம் மொத்தமாக அழிக்கப்படலாம் என்கிற அச்சம் என்னை உறுத்துகின்றது. இலங்கையில் எதிர்காலத்தில் நகர புற கெரில்லா போர் ஏற்பட்டு விடுமா? என்கிற அச்சம் தெரிகின்றது. முஸ்லிம்களுக்குள் இருந்து இளைஞர்களுக்குள் வருகிற புதிய வன்முறையின் அரசியல் வடிவம் என்பது காடுகளை பின்புலமாக கொண்டது அல்ல. அரசாங்கம் பாதுகாப்பு விடயங்களை மிக அவதானமாக, நேர்த்தியாக, நேர்மையாக கையாள வேண்டும் என்று நான் கேட்டு கொள்கின்றேன். பாதுகாப்பு கெடுபிடிகளால் தமிழர்களுக்கு ஏற்படுத்திய கிலேச்சத்தை, கோபத்தை முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தவே கூடாது. அந்த அந்த ஊர் மட்டங்களில் பொறுப்புகளை பாரம் கொடுப்பது உசிதமானது. சாதாரண மக்களை மென்மையாக கையாளுங்கள்.