கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க எதிரணியின் பெரும்பாலான உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
உடுகம்பொல பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
கோட்டாவை ஜனாதிபதி வேட்பாளராக்கும் கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களின் தீர்மானங்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மதிப்பளிப்பார்.
புதிய அரசாங்கத்தில் ஜனாதிபதியும், பிரதமரும் பொதுஜன பெரமுன கட்சியிலிருந்தே தெரிவு செய்யப்படுவார்கள்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும், பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் பரந்துபட்ட கூட்டணி அமைத்தல் தொடர்பில் தொடர் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றபோதிலும் ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் இரு தரப்பினருக்கிடையில் வேறுபட்ட கருத்துக்களே காணப்படுகின்றன.
சுதந்திர கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவதாக குறிப்பிடுகின்றமை சுதந்திர கட்சியின் தனிப்பட்ட தீர்மானமாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.