ஆமியை சாமியாக பார்க்கிற காலத்தையாழில் உருவாக்கியவர் தளபதி தர்ஷன

        ஆமியை சாமியாக பார்க்கிற காலத்தையாழில் உருவாக்கியவர் தளபதி தர்ஷன
           – நல்லெண்ண தூதுவர் செல்வா       
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தை தமிழ் மக்கள் ஆமியாக பார்த்த காலத்தை மாற்றி சாமியாக தரிசிக்கின்ற வாழ்க்கை கோலத்தை உருவாக்க முன்னின்று உழைத்தவர் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி ஆவார் என்று இராணுவத்தின் மனித நேய வேலை திட்டங்களுக்கான தேசிய இணைப்பாளர் மற்றும் நல்லெண்ண தூதுவர் ஏ. செல்வா தெரிவித்தார்.
இவரின் நெல்லியடி அலுவலகத்தில் வடக்கு, கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களை நேற்று வியாழக்கிழமை சந்தித்து யாழ். மாவட்டத்தில் இருந்து விடை பெற்று செல்கின்ற மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி யாழ். மாவட்ட கட்டளை தளபதியாக இருந்து ஆற்றிய சேவைகளை விதந்துரைத்தபோதே செல்வா இவ்வாறு தெரிவித்தார்.
செல்வா இங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு
மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி யாழ். மாவட்ட கட்டளை தளபதியாக பதவி வகித்த வருடங்கள் இம்மாவட்ட மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்புகள் ஆகும். இவரின் காலத்தில் பாதுகாப்பு கெடுபிடிகள் மிக கணிசமான அளவில் குறைக்கப்பட்டு மக்கள் நலன்புரி வேலை திட்டங்கள் ரொக்கற் வேகத்தில் முன்னெடுக்கப்பட்டன. இன நல்லிணக்க செயற்பாடுகளை மனம் வைத்து இராணுவம் முன்னெடுத்தது.
வறிய, வாழ்வாதாரம் அற்ற, வருமானம் குறைந்த யாழ்ப்பாண குடும்பங்களின் மீட்பராக மேஜர் ஜெனரல் தர்ஷன அவதாரம் எடுத்தார். இவரின் சிந்தனை, வழிகாட்டல், அறிவூட்டல் ஆகியவற்றுக்கு அமைவாக இம்மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட மனித நேய வேலை திட்டங்கள் கணக்கற்றவை. குறிப்பாக தென்னிலங்கை மற்றும் புலம்பெயர் தேசங்களை சேர்ந்த மனித நேய செயற்பாட்டாளர்களின் நிதி பங்களிப்புகளை பெற்று இராணுவத்தின் பங்கேற்புடன் இம்மாவட்ட மக்களின் வாழ்வாதார, பொருளாதார, வாழ்வியல் முன்னேற்றங்களுக்கு அனைத்து வழி வகைகளிலும் முடிந்தளவு பணிகள் செய்தார் என்று கூறுவது சால பொருத்தமானதாக இருக்கும். அரசியல்வாதிகள்  இவரை முன்மாதிரியாக கொண்டு மக்கள் சேவைகளை முன்னெடுக்க வேண்டியவர்களாக உள்ளனர்.
யாழ்ப்பாணத்தின் காவலனாக விளங்கிய இவர் இப்போது தேசத்தின் காவலனாக பரிணமிக்கின்ற காலம் மலர்ந்து உள்ளது. இந்நிலையில் இவர் மூலமாக பயன் பெற்ற பல்லாயிர கணக்கான யாழ்ப்பாண குடும்பங்கள் இவருக்கு உணர்வு பூர்வமான பிரியாவிடையை வருகின்ற தினங்களில் வழங்குகின்றனர். இவர் பிரியாவிடை பெற்று சென்றாலும்கூட இவர் என்றும் எம் மக்களின்  மனங்களில் நிறைந்து வாழ்வார். இவர் ஆற்றிய சேவைகள் என்றென்றைக்கும் இவரின் பெயரை சொல்லி கொண்டே இருக்கும். அதே நேரத்தில் இவர் எங்கிருந்தாலும் எமது மக்களுக்கு தொடர்ந்து உதவிகள் செய்வார் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. அதே நேரத்தில் யாழ். மாவட்டத்தின் புதிய தளபதியாக பொறுப்பேற்பவர் இவர் விட்ட இடத்தில் இருந்து மக்கள் சேவைகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்வார் என்று விசுவாசிக்கிறோம்.

Related posts