கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கான வருடாந்த இடமாற்றக் கடிதங்கள் வெகு விரைவில்

கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கான வருடாந்த இடமாற்றக் கடிதங்கள் வெகு விரைவில் அனுப்பி வைக்கப்படும் என மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.எம்.நிசாம் உறுதியளித்துள்ளதாக தமிழர் ஆசியர் சங்கத்தின் தலைவர் கே.நல்லதம்பி தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்: வலயங்களுக்கிடையிலான வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் 2018 கடந்த ஜனவரி மாதம் செயற்படும் வண்ணம் அனுப்பி வைக்கப்பட்டிருக்க வேண்டும் ஆனால் உள்ளுராட்சி சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் காரணமாக அது ஒத்தி வைக்கப்பட்டு ஏப்ரல் மாதம் ஆரம்பத்தில் அனுப்பி வைப்பது என அறிவிக்கப்பட்டது.

எனினும் இந்த இடமாற்றத்திற்கு தகுதியானவர்களின் பெயர் விபரங்கள் மாகாண கல்வித் திணைக்களத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டு இருந்தது. இதனால் இடமாற்றம் செய்யப்பட இருக்கின்ற ஆசிரியர்கள் தங்களது பெயர் விபரங்களை பார்வையிட்டனர். எனினும் மேன்முறையீட்டு விண்ணப்பங்கள் பூர்த்தியானதும் கடிதங்கள் அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறாக காலம் கடந்து ஆறுமாதங்கள் சென்றதனால் ஆசிரியர் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது மாத்திரமன்றி எமது சங்கத்திடம் முறைப்பாடு செய்தார்கள் இதன் காரணமாக அண்மையில் கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாணக் கல்விப்பணிப்பாளர் ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடியதன் அடிப்படையில் வருட நடுப்பகுதியாக இருப்பதனால் தரம் 5 , க.பொ.த (உ.த) மற்றும் க.பொ.த (சா/த) மாணவர்களது கல்வி பாதிக்கப்படும் என்பதனால் இடமாற்றம் செய்வது கடினம் எனத் தெரிவிக்கப்பட்டது.

எனினும் தற்போது உள்ள நிலையினை எடுத்துக் கூறி இடமாற்றக் கடிதங்கள் ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் எனவும் செயற்படும் திகதி பிற்போடப்படலாம் எனவும் கேட்டுக் கொண்டோம் அதன் அடிப்படையில் ஆளுநரைச் சந்தித்து கதைத்து முடிவெடுப்பதாக மாகாணக் கல்விப்பணிப்பாளர் அவர்கள் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் தொலைபேசியில் மாகாணக்கல்விப் பணிப்பாளருடன் தொடர்புகொண்டபோது இடமாற்றம் செய்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.அதன் அடிப்படையில் யூலை 17 ஆம் திகதிக்கு முன்னர் தகுதியானவர்களுக்கு இடமாற்றக்கடிதங்கள் அனுப்பிவைக்கப்படும் எனவும் அவர்கள் நியமனம் செயற்படும் திகதி 01.01.2019 ஆண்டாகவும் இருக்கும் எனவும் மாகாணக் கல்விப்பணிப்பாளர் குறிப்பிட்டார். இது ஆறுதல் தரும் விடயமாக இருந்தாலும் மாணவர்களின் நலன் கருதி ஏற்றுக் கொள்ளப்பட்டது.

Related posts