கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எம்.கே.எம்.மன்சூர் பதவியை வகிக்க முடியும் – நீதிமன்றம் உத்தரவு

கிழக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தொடர்ந்தும் அந்தப் பதவியை வகிக்க முடியும் என திருகோணமலை மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட ஏ.ரி.ஏ.நிஸாம், அந்தக் கடமையை ஆற்றக்கூடாது எனவும் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.

புதிய ஆளுநர் எம்.ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாவினால் வழங்கப்பட்ட நியமனக் கடிதம் மற்றும் இடமாற்றக் கடிதத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது என இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளர், எம்.கே.எம்.மன்சூர் தாக்கல் செய்திருந்த ஆணை வழக்கு, திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ரோஹித போகொல்லாகமவினால், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எம்.கே.எம்.மன்சூர் 2018 செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி நியமிக்கப்பட்டார்.

போகொல்லாகம பதவியிலிருந்து நீங்கிய பின்னர், கிழக்கு மாகாண புதிய ஆளுநராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டார்.

இதனையடுத்து, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராகவிருந்த எம்.கே.எம்.மன்சூர் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி நீக்கப்பட்டு, புதிய கல்விப் பணிப்பாளராக ஏ.ரி.ஏ.நிஸாம் நியமிக்கப்பட்டார்.

கல்விப் பணிப்பாளராகவிருந்த, எம்.கே.எம். மன்சூருக்கு சிரேஷ்ட உதவி செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

இதனையடுத்து, எம்.கே.எம்.மன்சூர், திருகோணமலை மேல் நீதிமன்றில் ஆணை வழக்கு தாக்கல் செய்து சில விடயங்களை சுட்டிக்காட்டினார்.

அதற்கமைய,
01. ஆளுநரின் செயற்பாடு இயற்கை நீதி கோட்பாட்டிற்கு முரணானது
02. தன்னை பதவியிலிருந்து நீக்கும்போது காரணம் தெரிவிக்கவில்லை
03. பதவி நீக்கும்போது எதுவிதமான விளக்கமும் தரவில்லை
04. தனக்கு வழங்கப்பட்ட புதிய பதவி, பதவி நிலை அல்லாத பதவியாகும்

எனவே, நீதிமன்றம் தலையிட்டு,

01. புதிதாக நியமிக்கப்பட்ட கல்விப் பணிப்பாளர் கடமையாற்றக்கூடாது என தடையுத்தரவும்,
02. தொடர்ந்து கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றுவதற்கான உத்தரவும்
03. ஆளுநரால் வழங்கப்பட்ட நியமனக் கடிதங்களை இரத்து செய்யுமாறு உத்தரவு கோரியும்

ஆணை மனு தாக்கல் செய்திருந்தார்.

ஆணை மனுவை விசாரித்த நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், புதிய கல்விப் பணிப்பாளர் கடமையாற்றக்கூடாது என உத்தரவிட்டார்.

Related posts