சஹ்ரானை சந்தித்தேன் – பகிரங்கமாக உண்மையை ஒப்புக்கொண்டார் ஹிஸ்புல்லாஹ்

உயிர்த்தஞாயிறு தற்கொலைதாரியான சஹ்ரானை 2015 ஆம் தேர்தல் கால சமயத்தில் ஒருதடவை மாத்திரமே சந்தித்தேன்.அதன் பின்னர் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் சஹ்ரானை சந்தித்தனர்.

இவ்வாறு தெரிவித்தார் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் இன்றுமாலை சாட்சியமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தனது சாட்சியத்தில் மேலும் தெரிவித்தவை வருமாறு

சஹ்ரானுடன் எனக்கு தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை நான் முற்றாக மறுக்கிறேன். சஹ்ரான் 2017 வரையான காலப்பகுதிவரை மதத்தலைவராகவே கருதப்பட்டார். அவர் மத போதனைகளில் ஈடுபட்டு அவரின் உரையால் பல இளைஞர்களை கவர்ந்திருந்தார்.பின்னாளில் அவர் பயங்கரவாதியாக மாறிவிட்டார். அத்துடன் அவர் ஐ.எஸ் குழுவுடன் தொடர்புகளை ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும் அவர் முன்னர் அப்படி இருக்கவில்லை.

பின்னாளில் சஹ்ரானும் அவரது குழுவினரும் எனக்கு எதிராக பணிபுரிந்தனர்.என்னை கடுமையாக விமர்சித் தனர். என்னை அழிக்க முயற்சித்தனர்.எனது ஆதரவாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தினர்.

சஹ்ரானின் சகா சகா நியாஸ் என்னை விமர்சிப்பதையே பொழுதுபோக்காக கொண்டிருந்தார்.

சஹ்ரான் இப்போது இல்லை என்பதில் நான் மிகவும் மகிழ்வடைகிறேன். அடுத்த தேர்தல்களில் எனக்கு அவரால் தொல்லை இருக்காது. எதிர்ப்பின்றி நான் செயற்படலாம்.

அத்துடன் முன்னாள் இராணுவ அதிகாரிகளுடன் சஹ்ரானும் அவரது குழுவினரும் மிகவும் நெருங்கிய தொடர்பு களை வைத்திருந்தனர்.

சஹ்ரான் இஸ்லாம் தொடர்பில் மாறுபட்ட கருத்துக்களை கொண்டிருந்து சர்சைக்குரியவராக இருந்தபோதும் அவரின் கூட்டங்களுக்கு ஒலிபெருக்கி அனுமதியை பொலிஸார் வழங்கியிருந்தனர்.

2017 ற்கு பின்னர் சஹ்ரானோ அவரது சகாக்களோ காத்தான்குடியில் இருக்கவில்லை. அவர்கள் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டார்களா என்பது எனக்கு தெரியாது.

அந்தப்பகுதியில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பல உறுப்பினர்கள் சஹ்ரானுடன் தொடர்பில் இருந்தனர்.

அச்சத்திலுள்ள முஸ்லிம்களை உற்சாகப்படுத்துவதற்காக உலகில் முஸ்லிம்கள் பெரும்பான்மை என்பதை நான் கூறினேன்

கிழக்கு இணைக்கப்படுவதை முஸ்லிம் மக்கள் விரும்பவில்லை

இதனால் வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டால், முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவதன் ஊடாக இரத்த ஆறு ஓடும் என நான் கூறியது உண்மையே.எனினும் முஸ்லிம்கள் தான் ஆயுதம் ஏந்துவார்கள் என்று மட்டுமே கூறினேன்.

காத்தான்குடியில் அரபு மொழிகளில் பெயர்ப்பலகைகள் இருப்பது அரபு நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை கவரவே தவிர வேறொன்றுக்காகவுமல்ல. அத்துடன் அரபு மொழி பெயர்ப்பலகைகள் இடக் கூடாது என்று நாட்டில் சட்டம் ஏதும் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts