தமிழர்களை ஒருபோதும் கைவிடப் போவதில்லை , தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வினை வழங்குவேன்

தமிழர்களை ஒருபோதும் கைவிடப் போவதில்லை என்றும், தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வினை வழங்குவேன் என்றும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

நாட்டின் சமகால அரசியல் நிலமைகள் தொடர்பில்,  வழங்கிய நேர்காணலிலேயே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன் போது மேலும் தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, புதிய அரசமைப்புக்கு எதிராகக் கூக்குரல் கொடுப்பவர்கள், உத்தமர்கள் அல்லர் என்றும், அவர்கள் இந்த நாட்டை நாசமாக்கிய ஊழல் செய்த கொலைகாரர்கள் என்றும், இப்படியானவர்களின் மிரட்டல்களுக்கு ஐக்கிய தேசிய முன்னணி அரசு அடிபணியாது என்பதோடு, புதிய அரசமைப்பை நிறைவேற்றியே தீருவோம் என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.

அரசியல் சூழ்ச்சியை முறியடித்து தான் மீண்டும் பிரதமராகுவேன் என, வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் நம்பியதாகவும், அவர்களின் நம்பிக்கை வீண்போகவில்லை என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேராதரவுடன் தான் மீண்டும் பிரதமராகியுள்ளதாகவும், எனவே, தமிழ் மக்களுக்கு என்றும் நன்றியுடையவனாக இருப்பதுடன், தன்னை நம்பும் தமிழர்களை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு நாட்டில் சகல மக்களும் சமவுரிமையுடன் சமாதானமாக, ஒற்றுமையாக வாழ, தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்றும், இதனைப் புதிய அரசமைப்பின் ஊடாகப் பெற்றுக்கொடுப்பேன் என்றும் உறுதியளித்துள்ளார்.

மேலும் தான் மீண்டும் பிரதமராகியதன் பின்னர் ஆற்றிய உரையில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியே தீருவேன் என்றும் அதலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்றும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

நாட்டைப் பிளவுபடுத்தாமல் ஒருமித்த நாட்டுக்குள் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை வழங்கவுள்ளதாகவும், மீண்டும் ஒரு குடும்ப ஆட்சிக்கோ, சர்வாதிகார ஆட்சிக்கு இடமளிக்ககப்போவதில்லை என்றும் அந்த நேர்காணலில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts