மாங்காடு சமுர்த்தி வங்கியானது கணனி மயப்படுத்தப்பட்டது

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சமுர்த்தி வங்கிகள் அனைத்தையும் கணனி மயப்படுத்தல் கடந்த சில வாரங்களாக நடைபெற்றுவருகிறது. அந்த வகையில்; மட்டக்களப்பு மாங்காடு சமுர்த்தி வங்கி கணனி மயப்படுத்தப்பட்டு மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி ஆர். பீ. பீ திலகஸ்ரீ மற்றும் மாவட்டச் செயலாளரும் மாவட்ட அரசாங்க அதிபருமான கணபதிப்பிள்ளை கருணாகரனினால் சம்பிரதாயபூர்வமாக   (12) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

13655 பயனாளிகளை கொண்டு இயங்கும் மாங்காடு சமுர்த்தி வங்கியானது களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக பகுதியில் அதிகூடிய சமுர்த்தி பயனாளிகளை கொண்டு இயங்கும் சமுர்த்தி வங்கியாகும். சமுர்த்தி வங்கி செயற்பாட்டினை உத்தியோகத்தர்களுக்கும் பயனாளிகளுக்கும் இலகுவாக அமைகின்ற வகையிலே இச் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் உரையாற்றுகையில் இலங்கையில் எல்லா பாகங்களிலும் சமுர்த்தி வங்கிகளானது கணனி மயப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையிலே வடக்கு கிழக்கு மக்களின் அடிப்படை பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் இச் செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் சகல சமுர்த்தி பயனாளிகளும் வறுமை எனும் நிலையிலிருந்து மீள வேண்டும் எனும் நோக்குடனே ஜனாதிபதி செயலணி பல்வேறு செயற்றிட்டங்களை சமுர்த்திக்கூடாக முன்னெடுத்து வருகின்றது. அந்தவகையிலே கிழக்கு மாகாணத்திற்கென பாரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மாவட்ட அரசாங்க அதிபருக்கூடாக பணிகள் நடைபெற்று வருவதாகவும் கருத்து தெரிவித்தார்.

இந் நிகழ்வில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள மாவட்ட பணிப்பாளர் திருமதி. ஏ. பாக்கியராஜா மண்முனை தென் எருவில் பற்று (களுவாஞ்சிக்குடி) பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்ணம் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள மாவட்ட கணக்காளர் எஸ். எம.; பஸீர் மாவட்ட தலைமை முகாமையாளர் ஜே.எப். மனோகிதராஜ் மாங்காடு சமுர்த்தி வங்கி முகாமையாளர் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Related posts