முஸ்லிம்கள் திருக்கோவில் பிரதேசத்தில் வர்த்தக நிலையங்கள் வைக்க அனுமதியில்லை

நாட்டில்  ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலையடுத்து முஸ்லிம்களின் பாதுகாப்புக்கருதி திருக்கோவில் பிராந்தியத்தில் முஸ்லிம்களுக்கு கடை வைக்க தற்காலிகமாக அனுமதிப்பதில்லையென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பிரதேசசபை தவிசாளர் ஆர்.டபிள்யு.கமலராஜன் தெரிவித்தார்.
திருக்கோவில் வர்த்தக சங்கம் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயம் திருக்கோவில் சகலகலை அம்மன் ஆலயம் தம்பிலுவில் கண்ணகை அம்மன் ஆலயம் உள்ளிட்ட பல அமைப்புகள் சகோதரமுஸ்லிம் வர்த்தகர்களுக்கு அவர்களது பாதுகாப்புக்கருதி கடைகள் வழங்க அனுமதிப்பதில்லையென எழுத்துமூலம் கடிதங்களை தமக்கு தந்திருப்பதாகத் அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற பிரதேசசபை அமர்வில் இதுவிடயம் பிரஸ்தாபிக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டு இறுதியில் இத்தகைய தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.திருக்கோவில் பிரதேசசபைக்குட்பட்ட கிராமங்களிலும் மற்றும் ஆலய உற்சவகாலங்களிலும் மேற்படி முஸ்லிம்களின் தற்காலிக வர்த்தக நிலையங்களை அமைக்க தற்காலிகமாக அனுமதிப்பதில்லையென பிரதேசசபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அசாதாரண சூழ்நிலையைப்பயன்படுத்தி சில தீயசக்திகள் அவர்களுக்கு ஏதாவது செய்யமுனைகின்ற சந்தர்ப்பங்களில் இனமுரண்பாடு ஏற்படவாய்ப்பிருக்கிறது. அது ஒட்டுமொத்த இப்பிரதேச தமிழ்மக்களுக்கு இழுக்காகலாம். எனவேதான் முதல் இருவாரகால அவகாசம் வழங்குவது. நிலைமை சுமுகமாகாவிடின் மேலும் நீடிப்பது என்றும் தீர்மானமாகியது.அதேவேளை அமர்வின்முடிவில் திருக்கோவில் வர்த்தகசங்கத்தினருடான கூட்டம் சபை மண்டபத்தில் வியாழனன்று நடைபெற்றது.
வர்த்தகசங்கத்தலைவர் எஸ்.வினாயகமூர்த்தி தலைமையிலான சுமார் 100 வர்த்தகப்பெருமக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைத்தனர். அதன்போது முஸ்லிம் வர்த்தகர்கள் வரவில்லையென்பதால் நீங்கள் விலைகூட்டி விற்பதை உறுதிப்படுத்தினால் சட்டநடவடிக்கை எடுக்கவேண்டிநேரிடும் என்று தவிசாளர் சங்கத்தினரிடம் வலியுறுத்திக்கூறியுள்ளார்.
மேலும் புதிதுபுதிதாக இளம்வர்த்தகர்களை உருவாக்க தடடிக்கொடுக்கவேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts