20 நாளாகத் தொடரும் வேலை நிறுத்தப் போராட்டத்தின் ஒரு பகுதியதாக  கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்.

(-க. விஜயரெத்தினம்)
20 நாளாகத் தொடரும் வேலை நிறுத்தப் போராட்டத்தின் ஒரு பகுதியதாக 
கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்.

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற்று வரும்  பல்கலைக்கழக ஊழியர்களது வேலை நிறுத்தப்போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் மட்டக்களப்பு-வந்தறுமூலையிலுள்ள கிழக்குப் பல்ககலைக்கழகத்தின் முன்னாலும் திருகோணமலை வளாகத்தின் முன்னாலும் நேற்றைய தினம் திங்கட்கிழமை (30) ஆம் திகதி காலை கவனயீர்ப்புக் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

கடந்த 10ஆம் திகதிமுதல் 20 நாளைக்கடந்து நடைபெற்றுவரும் பல்கலைக்கழக கூட்டுக்குழுவின் போராட்டத்திற்கு அரசாங்கத்தினால் இன்னமும் தீர்வு வழங்கப்படவில்லை என்று இன்றைய போராட்டக் காரர்கள் தெரிவித்தனர்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னால் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கருத்து வெளியிட்ட கிழக்குப் பல்கலைககழக ஊழியர் சங்கத்தின் தலைவர் ஏ.ஜெகராஜு,
எம்முடைய நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் போராட்டம் தொடரும் அல்லாவிட்டால் போராட்ட வடிவங்கள் மாற்றமடையும். கடந்த 20ம் திகதி வெள்ளிக்கிழமை உயர் கல்வி அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் கலந்து கொள்ளாமையினால் அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் நிறைவடைந்தது. 

ஏற்கனவே வழங்கப்பட்ட உறுதி மொழிகள் நிறைவேற்றப்படாமையினாலேயே போராட்டம் நடைபெற்று வருகிறது.கௌரவ உயர்கல்வி அமைச்சர் எங்களுடைய பிரச்சினைகளுக்கு கூடியவரைவில் நியானமான தீர்வொன்றை வழங்குவேன் என்று கூறியிருந்தார். இருப்பினும் இன்னமும் தீர்வுகள் எட்டப்படவில்லை. இந்த நிலையில் போராட்டத்திற்கு தீர்வு கிடைக்காத வரையில் எங்களுடைய போராட்டம் தொடரும்  என்றும் தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் உறுப்பினர் ஒருவர், 
பொருள்களின்  விலைவாசியும் வாழ்க்கைச் செலவும் அதிகரித்திருக்கின்ற நிலையில் , ஊழியர்களாக எங்களுக்குத் தேவையான காரியங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம்.அந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. அரச உத்தியோகத்தர்களின் 107 வீத அடிப்படைச் சம்பள அதிகரிப்பானது பல்கலைக்கழக ஊழியர்களுக்கு முழுமையாக வழங்கப்படவில்லை. 
ஏற்கனவே வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறும், பல்கலைக்கழக ஊழியர்களுக்கான ஓய்வூதியப்பிரச்சினைகளைச் சீர் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம்.அவை நிறைவேற்றப்படாமையினால் எமது போராட்டம் தொடர்கிறது என்றார்.
செப்ரம்பர் மாதம் 10ம் திகதி ஆரம்பமான பல்கலைக்கழக தொழில்சங்கக் கூட்டுக்குழுவின் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டமானது தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், கிழக்குப் பல்கலைககழத்தின் முன்னால் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டிருக்கிறது.

Related posts