ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப்பிரகடனத்திற்கு அமைவாக 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் மூலம் அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி நிவாரண தொகையை சமுர்த்தி பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்வு செங்கலடி பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் தலைமையில் செங்கலடி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இதன் போது பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சரும் ஏறாவூர்ப்பற்று பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவருமான சதாசிவம் வியாழேந்திரன் அவர்களால் சமுர்த்தி பயனாளிகளுக்கு அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவு வழங்கப்பட்டதுடன், சுயமாக முன் வந்து தாம் பெற்றுவந்த சமுர்த்தி நிவாரணத்தை ஒப்படைத்த சமுர்த்தி பயனாளிகளுக்கு பொற்சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி சிரேஸ்ட முகாமையாளர் ஜே.எப்.மனோகிதராஜ், செங்கலடி பிரதேச செயலக சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.இராசலிங்கம், தலைமையக முகாமையாளர், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.