அந்தரத்திலாடும் அம்பாறைக்கான தேசியஆசனம்!

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஒரேயொரு தேசியபட்டியல் பிரதிநிதித்துவத்தை அம்பாறை மாவட்டத்திற்கென வழங்கி சூடுஆற முன்னரே அதனை நிறுத்திவைத்துள்ளனர்.
 
குறித்த ஆசனம் அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளிப்பிரதேசசபை தவிசாளரும் முன்னாள் கிழக்குமாகாணசபை உறுப்பினருமான தவராசா கலையரசனுக்கு வழங்குவதாக  ஞாயிற்றுக்கிழமை காலை தமிழரசுக் கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கம் அறிவித்திருந்தார்.
 
எனினும் அந்த தேசியப்பட்டியல் ஆசனத்தில் பரவலாக எழுந்த எதிர்ப்பையடுத்து அம்பாறைக்கு வழங்கப்பட்ட பிரதிநிதித்துவம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
எந்த கட்சி அந்த தேசியபட்டியலை அம்பாறைக்கு வழங்கியதோ அதே கட்சியின் தலைமை மாவைசேனாதிராஜா தொடக்கம் வடக்கு தலைமைகள் பல எதிர்ப்புத் தெரிவித்து ஊடகங்களுக்கு அறிக்கைவிட்டுக்கொண்டிருந்தனர்.நிலைமையை சமாளிக்க கூட்டமைப்புத்தலைவர் சம்பந்தன் தற்காலிகமாக அதனை நிறுத்துமாறு செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
 
ஆசனம் தமது கலையரசனுக்கு கிடைத்துவிட்டது என்ற மகிழ்ச்சியில் அம்பாறையில் அவர்சார்ந்த அணியினர் பட்டாசு கொழுத்தி வெற்றிக்களிப்பைக் கொண்டாடினர். அம்பாறை தமிழ்மக்களும் சற்று ஆறுதலடைந்தனர். கட்சிக்கு நன்றி தெரிவித்தனர். வெறுப்படைந்த சிலரும் ஆதரவு தெரிவித்தனர். அவரும் ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவித்து மகிழ்ச்சியிலிருந்தார்.
 
அந்த மகிழ்ச்சி ஒருசிலமணிநேரத்தில் இடி விழுந்தால்போல் பாரியஅதிர்வோடு அடங்கியது. மீண்டும் அதிருப்தியாளர்கள் அதிகரிக்கின்றனர். சமுகவலைத்தளங்களில் அதிர்வான பதிவுகள் பிரதேசவாதத்தோடு பதிவிடப்பட்டுவருகின்றன. ஏலவே ஓரளவு மறைந்திருக்கின்ற இந்த மேலாதிக்க கருத்தாடல்கள் மீண்டும் துளிர்விட இச்சம்பவம் துணைபோயிருக்கிறது.
 
மொத்தத்தில் இன்று கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனம் அந்தரத்தில் ஊசலாடுகிறது.
 
தமிழரசுக்கட்சியின் பரவணிப்பண்புகளில் ஒன்று ஏனைய கட்சிகளை மதியாமல் தன்னிச்சையாக முடிவெடுப்பதென்பது பங்காளிக்கட்சிகளின் தொடர்ச்சியான குற்றச்சாட்டாகும். அதனையே ரெலோ முதல்வர் செல்வம் அடைக்கலநாதனும் புளொட் தலைவர் சித்தார்தனும் ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.
இந்தவிடயத்தில் ரெலோ தரப்பினர் குறிப்பாக தலைவர் செல்வம் மற்றும பாராயுமன்றஉறுப்பினராகும் ஜனா ஆகியோர் அத்தேசியப்பட்டியல் அம்பாறைக்கே வழங்கவேண்டும் என்று நிதானமாக ஆனால் ஆணித்தரமான ஜனநயாகப்பண்புடன் கூறியுள்ளனர்.
 
ஆனால் புளொட் சித்தரோ அது மாவைக்கு வழங்கப்படவேண்டும் என்றும் கூறியுள்ளார். மொத்தத்தில் வீட்டுக்குள் பூகம்பம் வெடித்திருக்கிறது. 
 
சரியோ பிழையோ த.தே.கூட்டமைப்பு என்பது 3 கட்சிகளின் கலவை. அக்கட்சிகளின் கருத்துக்கள் கட்டாயம் கோரப்பட்டிருக்கவேண்டும். மற்றது பங்காளிக்கட்சிகளின் பிரதான கட்சி தமிழரசுக்கட்சி. இந்தக்கட்சியின் பேரில்தான் தேர்தலில் போட்டியிட்டுவருகிறது. அதன்சின்னமான வீட்டுச்சின்னத்தைக் காட்டியே தேர்தல் பிரசாரம் நடக்கிறது.
 
அத்தகைய கட்சியின் தலைவருக்குத் தெரியாமல் அதன் செயலாளர் திடுதிப்பென முடிவெடுத்து தேசியபட்டியல் ஆசனம் தொடர்பாக ஏனைய பங்காளிக்கட்சிகளுடன் கதையாமல் தேர்தல் ஆணையகத்திற்கு அறிவித்திருப்பதென்பது கேள்விக்குரியதே.
 
மாவை சிரேஸ்டதலைவர். சரி பிழை என்பதற்கப்பால் அவரொரு தலைவர். அவரும் தோல்வியடைந்தவர்.ஆசனத்ததை எதிர்பார்த்திருக்கலாம். எனவே அவரிடம் சொல்லாமல் கலந்துரையாடாமல் அம்முடிவை ஊடகங்களிடம் அறிவிப்பதென்பதும் கட்சிக்குள்ளேயுள்ள கசடுகளை வெளிக்காட்டமுடியுமே தவிர ஆவதொன்றுமில்லை. அது ஜனநாயகமுமல்ல.
 
அதேவேளை வடக்கு கிழக்கில் தமிழ்ப்பிரதிநிதித்துவத்தை இழந்துள்ள மாவட்டம் அம்பாறை என்பது சர்வதேசத்திற்கே தெரியும். இக்கட்டத்தில் அதனை எவ்வித மனிதாபிமனம் ஜனநாயகமுமின்றி அம்பாறைக்கு வெளியேயுள்ள ஒருவருக்கு வழங்கவேண்டுமென்ற முடிவும் அதற்கு சாதகமாக அங்கிருந்து தலைவர்கள் சிலர் குரல்கொடுப்பதும் கட்சிக்கு அழகல்ல. ஆரோக்கியமுமல்ல.
 
இந்நிலையில்  அக்கட்சியின் யாழ். மாவட்டக் கிளை உறுப்பினர்கள் மார்ட்டின் வீதியில் உள்ள தலைமை அலுவலகத்தில் அவசரமாகக் கூடி தேசியப் பட்டியல் ஆசனம் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கே வழங்கப்பட வேண்டும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
 
இதே வேளை அம்பாறையை சேர்ந்த த.கலையரசனை தேசியப்பட்டியல் எம்.பியாக்குவதாக குறிப்பிட்ட கடிதத்தை தேர்தல்கள் திணைக்களத்திற்கு அனுப்பாமல் தாமதிக்கும்படி கட்சியின் செயலாளரிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 
பொதுவான முடிவு ஒன்றினை எடுக்காமல் தன்னிச்சையாக யாராவது தேசியப் பட்டியலுக்கு நியமிக்கப்பட்டால் அந்த முடிவு மீள்பரிசிலனை செய்யப்பட வேண்டும் என்றும் அக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 
இதன்படி கலையரசனை தேசியப்பட்டியல் ஆசனத்திற்கு நியமிக்கும் முடிவை தற்காலிகமாகஇ தமிழ் தேசிய கூட்டமைப்பு நிறுத்தி வைத்துள்ளது.
இதனிடையே தமிழ் தேசிய கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கு கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மட்டுமே காரணம் என தமிழரசு கட்சியின் கொழும்பு மாவட்டத்தின் உப தலைவி மிதுலைச்செல்வி ஸ்ரீபற்மனாதன் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.சுமந்திரனை கட்சியில் இருந்து வெளியேற்றினால் தமிழரசு கட்சி மட்டுமல்ல தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பயணிக்கும் வாய்ப்பு கிட்டும் என்றும் அவர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
 
ரெலோ தலைவர் செல்வத்தின் அறிக்கை!
 
தன்னிச்சையாக தேசியப் பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டமையை வன்மையாக கண்டிக்கின்றேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் டெலோ கட்சியின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
 
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான தமிழீழ விடுதலை இயக்கம் டெலோவின் கருத்தையும் கேட்டு அந்த கருத்தின் பிரகாரம் முடிவுகளை எடுத்திருந்தால் மிக சிறப்பாக இருந்திருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியல் ஆசன ஒதுக்கீடானது பங்காளிக்கட்சிகயான புளொட் மற்றும் டெலோ ஆகிய இரு கட்சிகளுடன் எவ்வித ஆலோசனைகளும் நடத்தாமல் தேசியப்பட்டியல் ஆசனத்தை அம்பாறை மாவட்டத்திற்கு வழங்கி வைத்துள்ளனர்.
 
அம்பாறை மாவட்டத்திற்கு குறித்த தேசிய பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டமைக்கு டெலோ எவ்வித எதிர்ப்பும் இல்லை.
ஏனைய மாவட்டங்களில் பிரதி நிதித்துவம் இருக்கின்றமையினால் அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் ஏனையவர்களினால் மிகவும் மோசமான செயற்பாடுகளினால் பாதிக்கப்படுகின்றனர்.
 
அடக்கு முறைக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்ற எமது மக்களுக்கு ஒரு பிரதி நிதித்துவம் தேவை. அந்த பிரதிநிதித்துவத்தை அம்பாறை மாவட்டத்திற்கு வழங்குவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை.
ஆனால் ஜனநாயக ரீதியில் செயல்பட்டுக்கொண்டிருக்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த விடயத்தில் கலந்தாலோசிக்க வேண்டிய நிலை உள்ளது.
சம்பந்தன் அவர்கள் தன்னிச்சையாக குறித்த தெரிவை மேற்கொண்டு இருக்கின்றார் என்பது வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
 
சின்ன விடயத்தில் இவ்வாறு நடந்து கொண்டால் இனி வரும் காலங்களில் சரியான ஒரு முடிவை மேற்கொள்ளுவதற்கான செயற்பாடுகளை செய்வதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த கருத்துக்களை நாங்கள் முன் வைக்கின்றோம்.
எங்களோடும் கலந்து ஆலோசித்து எடுக்கப்படுகின்ற முடிவுகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கின்ற அனைவரும் ஆதரவை வழங்குவோம்.
 
ஏற்கனவே எமக்கு ஆசனங்கள் குறைவடைந்துள்ளது. எங்களுக்கிடையில் ஒற்றுமை இல்லை என்கின்ற நிலைப்பாடு உள்ளது. அந்த வகையிலே இவ்வாறான சம்பவங்கள் காலப்போக்கில் பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தும்.
மாவை அவர்களிடம் கூட ஆலோசனைகள் செய்தார்களா? என்று தெரியவில்லை. தன்னிச்சையான முடிவை நாங்கள் எதிர்க்கின்றோம். இவ்வாறான தன்னிச்சையான முடிவு இனி எந்த காலத்திலும் மேற்கொள்ளப்படக் கூடாதென அவர் தெரிவித்துள்ளார்.
 
அம்பாறைக்கு தேசியப்பட்டியலை வழங்குவதாக உறுதியளித்துவிட்டு இரவோடிரவாக பின்வாங்கிய கூட்டமைப்பு  கிழக்கு மாகாணத்தை இப்படி புறந்தள்ளுமாயின் அடுத்த தேர்தலில் முற்றாக மாகாணத்தில் இருந்தே அகற்றப்பட்டுவிடும். என்று பிரபல பத்திரிகையாள் ஆர்.சிவராஜா குறிப்பிடுகின்றார்..
 
அம்பாறை பிரதிநிதித்துவம் பறிபோனதேன்?
 
அம்பாறை மாவட்ட தமிழ்ப்பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டது யாரால் என்பதை முதலில் முழுமையாக ஆராயவேண்டும்.
கிழக்கு மாகாணசபையை முஸ்லிம்களிடம் தாரை வார்த்தும் கிழக்கு தமிழ்மக்கள் கடந்ததேர்தலில் 5ஆசனங்களுடன் தேசியப்பட்டியலுக்குத் தேவையான வாக்குகளையும் வாரிவழங்கியும்  த.தே.கூட்டமைப்பை அழகு பார்க்க பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைத்தது கிழக்கு தமிழ்மக்கள். இது தேர்தல் பரப்புரையில் எதிரணியினரால் முன்வைக்கப்பட்ட வாதங்கள்.
 
அத்துணை தாராள மனசு கிழக்குவாழ் தமிழ்மக்களுக்கு.. அத்தனை ஆசனங்களையும் வைத்துக்கொண்டு நம்பிக்கையில்லாப்பிரேரணை வரவுசெலவுத்திட்ட வாக்கெடுப்பு போன்ற பல அரிய வாய்ப்புகள் கிடைத்தபோதெல்லாம் சிங்கள ஏகாதிபத்திய தலைவர் ரணிலுக்கு முட்டுக்கொடுக்க பயன்படுத்தினார்களே தவிர கிழக்குத் தமிழர்களுக்கு உருப்படியாகச் செய்தது ஒன்றுமில்லை என்று நோக்கர்கள் கூறுகின்றனர்.
 
ஆட்சியை தாங்கியவர்கள் தரமானவர்கள் அமைச்சரைவிட அதிக அதிகாரம் படைத்தவர்கள் என்றெல்லாம் கூறப்பட்ட கூட்டமைப்பினரால்கல்முனை தமிழ்ப்;பிரிவை தரமுயர்த்தக்கூட முடியவில்லை.
 
கடைசி கணக்காளரைக்கூட கொண்டுவரமுடியவில்லை. உண்ணாவிரதநேரத்தில் பிரதிநிதிகள் உறுப்பினர்கள் உறுதியளித்த எதுவுமே நடைபெறவில்லை. மொத்தத்தில் அம்பாறை மாவட்ட தமிழ்மக்களுக்கு கூட்டைமப்பு என்ன செய்தது என்ற வெறுப்பு தமிழ்மக்களிடையே அதிகமாகவிருந்தது.
 
தமிழனத்தின்மீதும் தேசியத்தின்மீதும் மண்மீதும் அடங்காப்பற்றுக்கொண்ட கல்முனை வாழ் தமிழ்இளைர்கள் கருணா அம்மான் பின்னால் அணிதிரண்டதற்கு பிரதான காரணமே தமிழ்த்தலைமைகளின் இந்த அசமந்தபோக்கு என்பதை யாரும் மறுதலித்துவிடமுடியாது. 
 
உண்மையில் பிரதிநிதித்துவம் இழந்தமைக்கு கருணா காரணமல்ல கூட்டமைப்பும்தான் காரணமென பலரும் விமர்சிக்கின்றனர். எப்படியாவது ஒரு ஆசனத்தை பெற்றுவிடவேண்டும் என்ற ஒரேயொரு காரணத்தைதவிர மக்களைப்பற்றி அல்லது அவர்களது உணர்வலைகளையிட்டு கூட்டமைப்புசற்றும் சிந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டுமுள்ளது.
 
வழமையாக 5வருடத்திற்கொருதடவை வேட்டியுடன்வரும் அதன் தலைவர்கள் இம்முறை யாரையும்(மாவையைத் தவிர)  அம்பாறையில் காணவில்லை. இதுகூட வேட்பாளர்கள் தொடக்கம் கூட்டமைப்பு செயற்பாட்டாளர்கள் மக்கள் வரை வெறுப்பைத் தோற்றுவித்திருந்தது. இதேவேளை வேட்பாளர்களிடையே சரியான புரிந்துணர்வு ஒற்றுமை காணப்படாமையும் அவதானிக்கப்பட்டிருந்தது.
 
மொத்தத்தில் வெறும் தேசியம் சர்வதேசம் என்றபதத்தை மட்டும் வைத்து இரத்தம்சிந்தி இரவுபகலாக பிரசாரத்தில் ஈடுபட்ட கூட்டமைப்பு வேட்பாளர்கள். மற்றும் இளைஞர்கள் இன்று வெட்கித்தலைகுனிந்து கூனிக்குறுகி நிற்கின்றனர்.
எனவே அம்பாறை தமிழர்கள்மீது கூட்டமைப்பிற்கு  உண்மையான விசுவாசம் அக்கறை இருந்தால் இத்தேசியப்பட்டியல் ஆசனத்தை அம்பாறைக்கு வழங்குவதே நியாயமானது. தார்மீகமானது. வடக்கையும் கிழக்கையும் மையப்படுத்தி தேசியம் வடக்கு கிழக்கு இணைந்தமாநிலம் சுயாட்சி என்றெல்லாம் மேடைகளில் கூவுவது உண்மையானால் இதனை உடனடியாகச்செய்யவேண்டும்.
 
இதைவிடுத்து அம்பாறைக்கு அப்பால் ஒருவரைத் தெரிந்துவிட்டு அவர் அம்பாறையைக் கவனிப்பார் என்று சொல்லமுற்படுவது அம்பாறைத்தமிழர்களை கொச்சைப்படுத்துவது போலவும் கேணயன்போலவும் ஏனைய சமுகங்கள் பார்க்க இடமுண்டு. இந்தப் பேய்க்காட்டல்களை இனியும் செய்தால் அம்பாறை மட்டுமல்ல கிழக்கே கூட்டமைப்பிற்கு அந்நியமாகிவிடும் என்பதில் சந்தேகமில்லை.
 
மக்கள் என்னசொன்னாலும் பத்திரிகையாளர்கள் என்னசொன்னாலும் நாம் தான்தோன்றித்தனமாகவே முடிவெடுப்போம்என்று முடிவெடுத்தால் இம்முறைத் தேர்தலில் மக்கள் காட்டிய ஆணையை விட மோசமான நிலைக்குச்செல்லும்.
 
த.தே.முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் கூட இதுவிடயத்தில் சிந்தித்து தேசியப்பட்டியலை அம்பாறைக்கு வழங்கமுன்வந்திருக்கலாம். தேர்தலில்மட்டும் அம்பாறை மக்கள் தேவை. முடிந்தால் அவர்கள் யாரோ என்ற போக்கும் வடக்கை மட்டும் மையப்படுத்தியதான போக்கும்  தமிழ்க்கட்சிகளுக்கு இருக்கும்வரை வீழ்ச்சியை மட்டுமே எதிர்நோக்கமுடியும்.
 
இந்நிலை தொடர்ந்தால் கிழக்கு மக்கள் தங்களுக்கென தனித்துவமான கட்சியொன்றை உருவாக்கும் செயலை தடுத்துவிடமுடியாது. இப்படியான நிலைக்குத் தள்ளியபெருமையும் தமிழ்த்தேசியத்திற்கே சாரும் என்பதில் ஜயமில்லை.
 
தோல்விக்கு காரணம் கருணாவா? கூட்டமைப்பா?
இம்முறை தேர்தல் பரப்புரையில் கருணா அம்மானுக்கு எதிராக இருபெரும் பாரிய பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டன. அதாவது அவர் ஏன் மட்டக்களப்பிலிருந்து அம்பாறை வந்தார்? என்பதும் அவர் துரோகி என்பதும்.
 
இந்த இரு பிரச்சாரத்தையும் உள்வாங்கிய அம்பாறை தமிழ்மக்கள் கருணாஅம்மானுக்கு அளித்த வாக்குகள் கூட்டமைப்பைவிட அதிகமானவை. அதாவது கூட்டமைப்பின் அந்தப்பிரசாரத்தை மக்கள் நம்பவில்லை. அல்லது அதனை உதாசீனம் செய்துள்ளனர்.அவர்களை மக்கள் நிராகரித்துள்ளனர். மாறாக இரண்டு மாதத்துள் பிரச்சாரத்திலிறங்கிய கருணா அம்மானுக்கு மக்கள் சுமார் 30ஆயிரம் வாக்குகளை அள்ளிவாரி வழங்கியுள்ளனர். எனவே கூட்டமைப்பால்தான் தமிழ்ப்பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டதே தவிர எம்மாலோ கருணா அம்மானாலோ அல்ல. எனவே அதற்கான முழுப்பொறுப்பையும் அவர்களே ஏற்கவேண்டும்.
 
இம்முறை தமிழர்சார்பில் பிரதானமாகப் போட்டியிட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு 25255 வாக்குகளையும் அகிலஇலங்கை தமிழர்மகாசபை 29379வாக்குகளையும் பெற்றமை தெரிந்ததே.
 
இங்கு 4124வாக்குகள் வித்தியாசத்தால் த.தே.கூட்டமைப்பை அ.இ.த.மகாசபை சார்பிலான கருணா அம்மான் அணி தோற்கடித்திருக்கிறது. எனவே குறைவாகப்பெற்ற கூட்டமைப்பினால்தான் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டிருக்கிறது.
 
அதாவது த.தே.கூட்டமைப்பு தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. மக்கள் செல்வாக்கை அது இழந்துள்ளது. அதன்கடந்தகால போக்குகள் முன்னாள் எம்.பி.கோடீஸ்வரன் மக்களுக்குசேவை செய்யாமல் தான்மட்டும் சம்பாதித்த  சுயநலசெயற்பாடுகள் மீது மக்கள் நிறைய வெறுப்படைந்துள்ளனர்.
அம்பாறை மாவட்ட தமிழ்மக்கள் சிலர் வீட்டுக்குவாக்களித்து தாமே தம் தலைமீது மண் அள்ளிப்போட்டுக்கொண்ட சம்பவமாக அதனைப்பார்க்கலாம்.
 
எனவே இதனை ஒருபாடமாக எடுத்து எதிர்காலத்தில் அம்பாறை மாவட்ட தமிழ்மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து த.தே.கூட்டமைப்பை முற்றாக நிராகரிக்கவேண்டும். அப்போதுதான் தமிழ்மக்கள் சமுக பொருளாதார ரீதியில் முன்னேறமுடியும்.விமோசனம் கிடைக்கும்.
அதுமட்டுமல்ல கிழக்கு மாகாண சபையை தமிழர் வென்றெடுக்கவேண்டுமாகவிருந்தால் கிழக்கு மாகாணத்திலிருந்து முற்றாக இக்கூட்டமைப்பை விரட்டியடிக்கவேண்டும். மக்கள் நிராகரிக்கவேண்டும். என அக்கட்சியின் தலைவர் த. கோபாலகிருஸ்ணன் கூறியுள்ளார்.
இதற்கு முன்பு 1994இலும் இப்படியானதொரு சம்பவம் நிகழ்ந்த வரலாறுள்ளது.
 
1994.08.16ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழர் சார்பில் தமிழர்விடுதலைக்கூட்டணி ரெலோ சுயேச்சைஅணி என்பன போட்டியிட்டன. அவை முறையே 24526 வாக்குகளையும் 4192வாக்குகளையும் 3366வாக்குகளையும் பெற்றுத் தோல்வியைச் சந்தித்தன. மாவை சேனாதிராஜா த.கோபாலகிருஸண்ணன் உள்ளிட்ட பிரபலங்கள் அத்தேர்தலில் போட்டியிட்டு மண்கவ்வினர்.
 
அத்தேர்தலில் பி.தயாரத்ன 45411வாக்குகளையும் சந்திரதாச கலப்பதி 40675வாக்குகளையும் எச்எம்.வீரசிங்க 36276வாக்குகளையும் எம்.எச்.எம்.அஷ்ரப் 69076 வாக்குகளையும் யு.எல்எம்.முகைதீன் 26194வாக்குகளையும் பெற்று  தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதாவது அத்தேர்தலில் தமிழர் யாரும் தெரிவாகவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
 
26வருடங்களின் பின்பு 2020இல் தற்போது மீண்டும் அதேநிலைமை அம்பாறை தமிழர்களுக்கு நேர்ந்துள்ளது.
அதனை நிவர்த்திக்க தமிழரின் ஏகப்பிரதிநிதிகள் வடக்குகிழக்குஇணைந்த தாயகத்தின் குரல் என்று சொல்லப்படும் த.தே.கூட்டமைப்பு ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்தை ஒரு 5வருடத்திற்கு பாதிக்கப்பட்ட உடன்பிறப்புகளுக்கு வழங்குவதற்கு இவ்வளவு இழுபறி என்றால் நிரந்தரதீர்வு வருகையில் எவ்வாறு நடந்துகொள்வார்கள் என்பதை ஊகிக்கக்கூடும்.
 
காலம் மாறும். மக்களின் மனநிலை மாறிக்கொண்டிருக்கிறது. தும்புக்கட்டு வியாபாரம் படிப்படியாக கடந்துசென்றுகொண்டிருக்கிறது. எனவே இக்கட்டத்தில் கூட்டமைப்பு சாமர்த்தியமாக நடந்துகொள்ளாவிட்டால் கிழக்கிலிருந்து அந்நியப்படும் என்பதை தவிர்க்கமுடியாது.
இந்நிலை தொடர்ந்தால் கிழக்கு மக்கள் தங்களுக்கென தனித்துவமான கட்சியொன்றை உருவாக்கும் செயலை தடுத்துவிடமுடியாது. இப்படியான துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளியபெருமையும் தமிழ்த்தேசியத்திற்கே சாரும் என்பதில் ஜயமில்லை.
 
வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு  நிருபர்
 
 
 
 

Related posts