நாட்டில் பல் துறை சார்ந்த அரச உத்தியோகத்தர்களும் தங்களை முழுமையாக அர்ப்பணித்து செயற்படுகின்ற இந்தச் சந்தர்ப்பத்தில், அரச உத்தியோகத்தர்கள் மீது வீண்பழிகளை சுமத்துவது ஏற்புடையதாகாது என, பழுகாமம் சமுர்த்தி வங்கி முகாமையாளார் பூபாலப்பிள்ளை தவேந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு – போரதீவுப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட பழுகாமம் சமுர்த்தி வங்கிச் சங்கத்தால் ரூபாய் 5,000 பெறுமதியான உலர் உணவு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அப்பொதியில் குறித்த பெறுமதிக்குரிய பொருள்கள் இல்லையெனவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக, பழுகாமம் சமுர்த்தி வங்கி முகாமையாளர் பூ.தவேந்திரனிடம் வினவிய போது, “எமது பழுகாமம் சமுர்த்தி வங்கிக் கிளையால் பயன்பெறும் எந்தவொரு மக்களுக்கும் உலர் உணவுகள் அடங்கிய நிவாரணப் பொதிகள் வழங்கவில்லை. இந்தச் செய்தி, உண்மைக்குப் புறம்பானது. அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட 5,000 ரூபாய் மானிய பணத்தை மாத்திரமே வழங்கியுள்ளோம்.
“எமது பிரதேச செயலாளரின் சிறந்த நிர்வாகத்தின் கீழ் நாம் சிறப்பாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். அரச அதிகாரிகள் மீது வெறுமனே வீண் பழிகளை யாரும் சுமத்த வேண்டாம். இந்தத் தவறான செய்திகளை பரப்பியோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.