இந்த நாடு பெளத்த சிங்கள நாடு நாடு என்று அடிப்படைவாதிகள் கொக்கரிப்பதை வெளிப்படையாக எதிர்த்து வந்தவர் என்பதோடு இந்த நாடு பல்லின சமூக மக்களுக்குரிய நாடு என்பதில் உறுதியாக இருந்தவர் மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.
கொவிட் தொற்றின் காரணமாக உயிரிழந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்களுக்கான அனுதாபச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நல்லாட்சிக்காலத்தில் சிறந்த நிதியமைச்சராகவும், வெளியுறவு அமைச்சராகவும் திகழ்ந்தவர் மங்கள சமரவீர அவர்கள் . அடிப்படை வாதமற்ற சிங்கள பெளத்த அரசியல்வாதிக்கு ஓர் உதாரணமாக இவர் மிளிர்ந்தார். மேலும் ஊழல், மோசடி, கையூட்டு என்ற சுய பிழைப்புவாத சுரண்டல்வாத அரசியலை இவர் செய்யவில்லை. சகல மக்களையும் சமத்துமமாக மதிக்கின்ற முற்போக்கான அரசியல் பண்பாடு இவரிடம் இருந்தது.
மேலும் சிறுபான்மைத் தமிழ் பேசுகின்ற அரசியல்வாதிகள், மக்களை மதித்து மரியாதை அளித்து நடக்கின்ற பண்பாளராக இவர் விளங்கினார். பதவிகள், பணம், படாபடோபங்களால் கொள்வனவு செய்ய முடியாத சுய கௌரவம் மிக்கவராக இவர் மிளிர்ந்தார். நல்லாட்சிக் காலத்தில் உள்நாட்டிலும், சர்வதேச மட்டத்திலும் நற்சாட்சிப் பத்திரம் பெற்றவராக இவரது நடத்தைகள் காணப்பட்டன. இப்படியான அரசியல்வாதிகளின் செயற்பாடுகள்தான் சிங்கள பெளத்தர்களுக்கும் பெருமை சேர்ப்பதாக அமைந்தது.
தாராண்மைவாத ஜனநாயகம், மனிதவுரிமைகள், சட்டவாட்சி என்பன இவரால் பெருமை அடைந்தன.1994 ஆம் ஆண்டில் சந்திரிக்கா அம்மையாரின் நம்பிக்கைக்குரிய அமைச்சராக செயற்பட்டார். சமாதானத்திற்கான வெண்தாமரை இயக்கத்தின் முன்னோடியாகவும் இருந்தார். மகிந்தராஜபக்ச அவர்கள் 2005 தாம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு இவரும் காரணராக இருந்தார். அக்காலத்தில் வெளியுறவு அமைச்சராகவும் இருந்தார். குறைந்த காலத்தில், அந்த அரசாங்கத்தின் போக்குகள், நோக்குகள் தவறாக இருந்தமையால் அவர் தனது அமைச்சர் பதவியையும் தூக்கி வீசிவிட்டு அந்த அரசாங்கத்தில் இருந்து வெளியேறி எதிர்க்கட்சியுடன் இணைந்து கொண்டார். இறுதிவரை ராஜபக்ச ஆட்சியின் போக்குகளை விமர் சிப்பவராக இருந்தார். வெற்றியிலும் தோல்வியிலும் அவர் தளம்பாமல் கெளரவமானவராக வாழ்ந்து காட்டினர்.
இந்த நாடு பெளத்த சிங்கள நாடு நாடு என்று அடிப்படைவாதிகள் கொக்கரிப்பதை வெளிப்படையாக எதிர்த்து வந்தார். அத்தோடு இந்த நாடு பல்லின சமூக மக்களுக்குரிய நாடு என்பதில் அவர் உறுதியாக இருந்தார். மேலும் தென்னிலங்கை சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பற்றியும், தமிழர்கள் பற்றியும் பரஸ்பர புரிந்துணர்வுகளை ஏற்படுத்துவதற்காக இவர் பாடுபட்டார்.
தென்னிலங்கையில் சிங்கள மக்களை ஒன்று திரட்டி த.தே.கூ இன் தலைவர் சம்பந்தன் ஐயா, ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் போன்றவர்கள் தமிழர்களின் நிலை பற்றியும், அவர்களது நியாயமான அபிலாசைகள் பற்றியும் பேசுவதற்கு வழி வகுத்தவர். அதன் மூலமாகச் சிங்கள மக்களும் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று விரும்பியவர் மங்கள அவர்கள். அவர் நல்லாட்சி அரசில் வெளியுறவு அமைச்சராக இருந்த போது ஈழத்தமிழர் தொடர்பாக சர்வதேச சமூகத்துடன் முரண்பாடற்ற கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார். இறுதியுத்தத்தின் போது மறைக்கப்பட்ட உண்மைகள், மறுக்கப்பட்ட நீதிகள், மீண்டும் அவை நிகழாமல் பாதுகாத்தல், நிலையான சமாதானத்தை எட்டுதல் போன்ற முயற்சிகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைப் பேரமையால் நிறைவேற்றப்பட்ட 30/1 ,34/, 40/1 பிரேரணைகளுக்கு இலங்கை சார்பாக இணை அனுசரணை வழங்கி அப்பிரேரணைகள் மொத்தமான 47 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்படுவதற்கு வெளியுறவு அமைச்சராக இருந்த மங்கள சமரவீர பாரிய ஒத்துழைப்பு வழங்கினார்.
அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் திறக்கப்படுவதற்கும் மங்களவழி சமைதத்தவர். தற்போதைய அரசாங்கம் இது போன்ற 46/1 தீர்மானத்தினை சர்வசாதாரணமாக நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் நிதியமைச்சராக இருந்த காலத்தில் த.தே.கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மூலம் வடக்கு கிழக்கில் அபிவிருத்திகள் மேற்கொள்வதற்காக பல கோடிக்களாக்கான நிதிகளை த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர்களின் அபிவிருத்தி முன்மொழிவுகளுக்கு இவர் ஒதுக்கினார். சமூக, பொருளாதார, அரசியல், கலாசார விடயங்களில் அடிப்படை வாதம் இல்லாமல் திறந்த மனதுடன் செயற்பட்ட இவரது இழப்பு பாரியதோர் வெற்றிடமாகும்.
துணிகரமான அடிப்படை வாதமற்ற, ஊழல் மோசடிகளற்ற முன்னாள் அமைச்சர் மக்கள சமரவீரவுக்கு தமிழ் மக்களும் அஞ்சலி செலுத்துவார்கள் என்பது உண்மை. நாமும் அவருக்கு நமது மனப்பூர்வமான அஞ்சலியைச் செலுத்துவோம். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும் என்று தெரிவித்தார்.